தியோகர் (ஜார்க்கண்ட்): பிரதமர் நரேந்திர மோடி பயணிக்க இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை, அடுத்து அவர் தியோகர் விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிஹாரின் ஜமுய் நகரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நகரம் ஜார்க்கண்ட்டின் தியோகர் நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜமுய் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தியோகர் விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தபோது அவர் பயணம் செய்ய இருந்த சிறப்பு விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
“பிரதமர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தியோகர் விமான நிலையத்தில் இருக்கிறார். அவர் டெல்லி திரும்புவதற்கான மாற்று ஏற்பாடு என்ன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிரதமர் செல்லும் வரை அந்த பிராந்தியத்தின் வான்வெளியில் ‘விமானங்கள் பறக்க தடை’ விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, ஜார்க்கண்ட்டின் கோட்டா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட தயாரானார். எனினும், வானில் ஹெலிகாப்டர் பறக்க அனுமதி வழங்கப்படாததால் அவர் ஹெலிகாப்டரிலேயே அமர்ந்திருந்தார். “எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் சுமார் 2 மணி நேரம் புறப்பட அனுமதிக்கப்படவில்லை. அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இது இருந்தது. மத்திய அரசின் உத்தரவே பாதுகாப்பு குறைபாட்டுக்குக் காரணம்” என்று ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் தீபிகா பாண்டே சிங் குற்றம் சாட்டினார்.