சென்னை: சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள், ரூ.8 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின், லாட்டரிச் சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்பனை செய்ததன் மூலமாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை சுமார் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அவர் முதலீடு செய்திருப்பதாகவும் எழுந்த புகாரின் பேரில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக மார்ட்டின் தொடர்புடைய சென்னை, கோவை ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிகாலை முதல் சோதனை நடத்தினர். சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள அவரது சொகுசு பங்களா, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆதவ் அர்ஜுனின் வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று சோதனை நீடித்தது.
இந்த சோதனையில், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கியது தொடர்பான ஆவணங்கள், லாட்டரிச் சீட்டு விற்பனை மூலம் கிடைத்த வருவாயை மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்கள், ரூ.8 கோடி ரொக்கம் சிக்கியது. மேலும், புதிதாக தொடங்கப்பட்ட கட்சி ஒன்றுக்கு பல கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கி இருப்பதாகவும், அது குறித்து ஆதவ் அர்ஜுனாவிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூரை அடுத்த வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள மார்ட்டின் வீடு, அருகேயுள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று 2-வது நாளாகத் தொடர்ந்தது. கூடுதலாக, சாயிபாபா காலனி மற்றும் சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தாபுரம் ஆகிய இடங்களில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் மார்ட்டினின் உறவினர் இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சோதனையில் வீட்டில் உள்ளவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.