கோவை: கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்றது. தவிர, கூடுதலாக இன்று மேலும் இரு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டியதாக, கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை நடத்தினர். இதில், லாட்டரி விற்பனை மூலமாக முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அதை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மார்ட்டின் முதலீடு செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
அதைத் தொடர்ந்து லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில், அமலாக்கத்துறையினர் தொடர்ச்சியாக கடந்த 2019-ம் ஆண்டு, 2021-ம் ஆண்டு, 2022-ம் ஆண்டு, 2023-ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் அடிக்கடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பல கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையாத சொத்துகள் முடக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நேற்று (நவ.14) அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூரை அடுத்த வெள்ளகிணறு பிரிவு பகுதியில் உள்ள மார்ட்டின் வீடு, அருகேயுள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஓமியோபதி கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனை இன்று (நவ.15) இரண்டாவது நாளாக தொடர்ந்து. இன்றும் அதிகாலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இன்று கூடுதலாக 2 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையைத் தொடங்கினர்.
அதாவது, சாய்பாபா காலனி மற்றும் சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தாபுரம் ஆகிய இடங்களில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியான லீமாரோஸ் மார்டினின் உறவினர் இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையின் போது, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக வீட்டில் உள்ளவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.