திருவனந்தபுரம்: நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் மறுசீரமைப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு மறுப்பது மிகவும் பாரபட்சமானது என்று கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் இந்த நிலைப்பாடு அதன் தீவிர பாரபட்சத்தையே காட்டுகிறது. இதை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானதா ராய், நேற்று (நவ.14), புதுடெல்லியில் கேரளாவுக்கான சிறப்பு பிரதிநிதி கே.வி.தாமஸிடம், “நிவாரணப்பணிகள் மேற்கொள்வதற்கு மாநில பேரிடர் மீட்பு நிதியில் (SDRF) போதுமான அளவு நிதி உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள SDRF/NDRF வழிகாட்டுதல்களின் கீழ் எந்த ஒரு பேரிடரையும் தேசிய பேரிடராக அறிவிக்க எந்த ஏற்பாடும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே இதுகுறித்து கேரளா நிதியமைச்சர் பாலகோபால் இன்று (நவ.15) கூறுகையில், “கேரள மக்கள் மீதான பழிவாக்கும் மனநிலைக்கான காரணம் குறித்து மத்திய அரசு விவரிக்க வேண்டும். கேரளா இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதை மத்திய அரசுக்கு தினமும் நினைவூட்ட வேண்டியுள்ளது.
ஜூலை 30-ம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400 பேர் உயிரிழந்தனர். குறைந்த அளவிலான பேரிடர்கள் சந்தித்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கிய போதிலும், கேரளாவுக்கு உதவிகள் மறுக்கப்பட்டன.
பிரதமர் மோடி ஆகஸ்ட் மாதம் வயநாட்டுக்கு சென்று வந்ததைத் தொடர்ந்து சிறப்பு அறிவிப்புகள் ஏதாவது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மத்திய அரசுக்கு பல நினைவூட்டல்களை கேரளா அனுப்பிய நிலையில், சிறப்பு உதவிகள் குறித்தோ, வயநாடு பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிப்பதோ வெளியாகவில்லை.
பேரிடர் ஏற்பட்டு பல மாதங்களுக்கு பின்பு மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துள்ளது. மத்திய – மாநில அரசுகளின் உறவுகளுக்கு அடிப்படையாக இருக்கும் கூட்டாட்சி மதிப்புகளை நரேந்திர மோடி அரசு புறக்கணிக்கிறது.
மத்திய அரசின் இந்த முடிவு அரசியல் ரீதியானது. இதை நிதி கூட்டாட்சி மற்றும் வரி வருவாயை சமமாக பிரிக்க வேண்டும் என்ற தற்போதைய சண்டையின் பின்னணியில் வைத்து பார்க்க வேண்டும். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும்.” என்று தெரிவித்தார்.