ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி அழைப்பிதழில் காவி உடையில் வள்ளுவர் படம்: முத்தரசன் கண்டனம் 

சென்னை: “ஆளுநர் ஆர்.என்.ரவி முதன்மை விருந்தினராக பங்கேற்கும் பன்னாட்டு கருத்தரங்க நிகழ்வின் அழைப்பிதழில், காவியுடை அணிந்து, பூணூல் போட்டு அமர்ந்துள்ள “வள்ளுவர்” படம் அச்சிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தொன்மை மரபையும், தனித்துவ பண்பையும் அறியாத ஆர்.என்.ரவி, தனது மதவெறி சார்ந்த மலிவான அரசியல் அடையாளமாக வள்ளுவரை பயன்படுத்தும் முயற்சியை தமிழகம் ஒரு போதும் ஏற்காது,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையை அரசியல் கட்சி செயலகமாக மாற்றி மலிவான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆளுநர் பொறுப்பை ஏற்ற ஆரம்ப காலத்தில் இருந்து அவரது செயல்பாடு கடுமையான கண்டனத்துக்கு ஆளாகி வருகின்றது. சில நேரங்களில் உச்ச நீதிமன்றம் கூட ஆளுநர் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளது. இவைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவது, அவரது ஜனநாயக உணர்வும், ஞானமும் வறண்டு கிடப்பதை வெளிப்படுத்துகிறது.

இன்று (நவ.16) ஆளுநர் மாளிகையில் நடைபெறும் திருவள்ளுவர் – கபீர் தாஸ், யோகி வேமனா – ஆகியோர் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்று நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி முதன்மை விருந்தினராக பங்கேற்கும் இந்த நிகழ்வின் அழைப்பிதழில், காவியுடை அணிந்து, பூணூல் போட்டு அமர்ந்துள்ள “வள்ளுவர்” படம் அச்சிடப்பட்டுள்ளது. வள்ளுவர் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழகத்தின் தொன்மை மரபையும், தனித்துவ பண்பையும் அறியாத ஆர்.என்.ரவி, தனது மதவெறி சார்ந்த மலிவான அரசியல் அடையாளமாக வள்ளுவரை பயன்படுத்தும் முயற்சியை தமிழகம் ஒரு போதும் ஏற்காது.

இதுபோன்ற செயல்கள் அவரது ஞான சூன்யத்தையும், அமைதியை சீர்குலைத்து ஆதாயம் தேடும் மலிவான எண்ணத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. ஆளுநரின் அநாகரிக செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.