இலங்கையின் புதிய பிரதமரை திங்கள்கிழமை அதிபர் திசாநாயக்க நியமிப்பார்: என்பிபி

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமரை அதிபர் அனுர குமார திசாநாயக்க வரும் திங்கள்கிழமை நியமிப்பார் என்று அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி அறிவித்துள்ளது.

இலங்கை பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றதை அடுத்து, பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வா, “புதிய அமைச்சரவையை நாங்கள் திங்கட்கிழமை (நவம்பர் 18, 2024) நியமிக்கவுள்ளோம்.

இந்த அமைச்சரவை அதிகபட்சம் 25 பேரை மட்டுமே கொண்டதாக இருக்கும். இன்னும் குறைவாக 23 அல்லது 24 ஆகவும் இருக்கலாம். அமைச்சர்களுக்கான துறைகள் விஞ்ஞான ரீதியாக ஒதுக்கீடு செய்யப்படும். அதேநேரத்தில், துணை அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். முக்கிய அமைச்சகங்களுக்கு கூடுதல் துணை அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்” என தெரிவித்தார்.

இலங்கை அரசியலமைப்பின் 46வது சரத்தின்படி, மொத்த கேபினெட் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. துணை அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஐ தாண்டக்கூடாது. எனினும், செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் சிறிய அமைச்சரவை அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் என்பிபி கட்சி எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் 61.56 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதற்கு முன் 2010 தேர்தலில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி 60.33 சாதவீத வாக்குகளைப் பெற்றதே அதிகமாக இருந்தது. இதேபோல், NPP அதிக எண்ணிக்கையிலான வாக்குச் சாவடிகளையும் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 168 வாக்குச்சாவடிகளில் 152 வாக்குச்சாவடிகளை NPP கைப்பற்றியுள்ளது. இதற்கு முன், ராஜபக்சேவின் கட்சி 136 வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதே அதிகமாக இருந்தது. மேலும், NPP மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2010ல் ராஜபக்சே 19 மாவட்டங்களை வென்றதே பெரிய வெற்றியாக இருந்தது.

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 196 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கட்சிகளின் வாக்கு சதவீதத்துக்கு ஏற்ப, எஞ்சிய 29 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த சூழலில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, நாடாளுமன்ற தேர்தல் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 196 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 141 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த கூட்டணிக்கு 61 சதவீத வாக்குகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் என்பிபி கூட்டணிக்கு கூடுதலாக 18 இடங்கள் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக என்பிபி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதேபோல, தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள் மற்றும் வாக்கு சதவீத அடிப்படையில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 40 இடங்கள் கிடைத்தன. முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணிக்கு 5 இடங்களும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன. இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு 8 இடங்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்தன. மற்ற கட்சிகள் 7 இடங்களை பெற்றுள்ளன.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை பொருத்தவரை, மட்டக்களப்பு மாவட்டம் தவிர்த்து, மற்ற அனைத்து பகுதிகளிலும் என்பிபி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பில் மட்டும் இலங்கை தமிழ் அரசு கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. யாழ்ப்பாணத்தில் என்பிபி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு தமிழர் கட்சி அல்லாத தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை. மலையக தமிழர்கள் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் என்பிபி கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது. கண்டி, மாத்தளை, ரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த கூட்டணிஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை என்பிபி கூட்டணி பெற்றுள்ளது. கடந்த 2020 நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களை பெற்றது. மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவான இடங்களை பெற்றதால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, சில எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற வேண்டிய நிலை இருந்தது. தற்போது என்பிபி கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளதால், ஆளும் கூட்டணி எந்த ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் எளிதாக நிறைவேற்ற முடியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.