கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிறகு, திருமணம் செய்ய மறுத்து விட்டார் எனக் காதலன் மீது இளம்பெண் ஒருவர் கொடுத்த புகாரில், குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் (21), தான் காதலித்த இளம்பெண்ணை (19) கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இளைஞர் மீது ஐபிசி 354ஏ பிரிவின் (Section 354-A(1)(i)) கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வளரிளம் பருவத்தில் காதலிப்பவர்கள் கட்டிப்பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் இயல்பானதாகவே பார்க்கப்படுவதாகக் கூறினார். மனுதாரர் திருமணம் செய்ய மறுத்த குற்றச்சாட்டை அப்படியே எடுத்துக் கொண்டாலும் காதலிப்பவர்கள் கட்டிப்பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் ஐபிசி 354 ஏ பிரிவின் கீழ் குற்றமாக அமையாது என்று அவர் தெரிவித்தார்.
இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்வதாகக் கூறிய அவர், இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.