எலான் எனும் எந்திரன் 1: புத்தகங்களைக் கரம்பிடித்த சவலைப் பிள்ளை – டெக் காதலில் பிறந்த 500 டாலர்!

எலான் மஸ்க். இந்தப் பெயரைக் கேட்டதும் ஒருவருக்கு என்னவெல்லாம் தோன்றும். உலகின் நம்பர் 1 பணக்காரர். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் சிஇஓ. அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போனவர். அவ்வளவு தானே. ஆனால், எலான் மஸ்க் இதை எல்லாம் தாண்டிய ஒரு அதிபுத்திசாலி அல்லது தேர்ந்த வணிகர் அல்லது ஒரு எக்ஸ்பெர்ட் மாஸ் சைக்காலஜிஸ்ட் அல்லது ஒரு அறிவியல் அறிஞர் என எந்த ஒரு குறிப்பிட்ட மனித வகைப்படுத்தலுக்குள் அடங்காத, பன்முகத் தன்மை கொண்ட மனிதர்.

Elon Musk | எலான் மஸ்க்

“Equal opportunities for all Americans, Allowing the highest aspirations and Goals to be achieved is the American Dream” என்பர். இத்தொடருக்கு ஏற்றாற் போலத் தான் அமெரிக்கா ஏறத்தாழ கடந்த ஏழு தசாப்தங்களாக இயங்கி வருகிறது.

இந்தியா, சீனா, ரஷ்யா, உட்பட… எல்லா நாட்டைச் சேர்ந்த அறிவாளிகளும், திறமைசாலிகளும், வணிகர்களும் அமெரிக்காவுக்குச் சென்று, வென்று, உலக அரங்கில் தங்களை பறைசாற்றிக் கொள்வதை நாம் நிறையப் பார்க்கலாம்.

Elon Musk | எலான் மஸ்க்

அப்பேற்பட்ட அமெரிக்கன் டிரீமை சாதித்தவர்களுக்கு அமெரிக்கா உட்பட, எல்லா நாடுகளிலும் ஒரு தனி மரியாதை உண்டு. அந்த அமெரிக்கக் கனவை, அதிவேகமாக, அளப்பரிய பரிமானங்களில், மீண்டும் மீண்டும் சாதித்தவர் எலான் மஸ்க். ஆகையால் தான், நாம் எலான் மஸ்கைப் நேசிக்கலாம் வெறுக்கலாம், போற்றலாம் தூற்றலாம்… ஆனால் ஒருபோதும் உலக வரலாற்றிலிருந்து அவரை புறந்தள்ள முடியாத இடத்தில் இருக்கிறார்.

அப்பேற்பட்ட மனிதரின் குழந்தைப் பருவம் அத்தனை இனிமையாக இல்லை. கனடாவைச் சேர்ந்த தாய்க்கும் (மே ஹால்டெமென்), தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தந்தைக்கும் (எரால் மஸ்க்) ஒரு இளைய சகோதரன் (கிம்பல் மஸ்க்) மற்றும் ஒரு இளைய சகோதரியோடு (டோஸ்கா மஸ்க்) பிறந்தவர் எலான் மஸ்க். “தாத்தாகிட்ட சொந்தமா பிளேன் இருக்கு தெரியும்ல” என்கிற அளவுக்கு பணக்கார குடும்பம் தான்.

1980ல் தன் பெற்றோர் விவாகரத்து பெற்றுக் கொண்ட பிறகு, தன் அப்பா எரால் மஸ்கோடு வாழ முடிவெடுத்தார் எலான். அது என் வாழ்நாளில் நான் செய்த தவறு என எலான் மஸ்கே வருந்தும் அளவுக்கு மோசமாக அமைந்தது.

பள்ளி படிக்கும் போது, சக மாணவர்களோடு நல்ல நட்பை பேண முடியாமல் தவித்தது, சக மாணவர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்ட சவலப் பிள்ளையாக வளர்ந்தது, போதாக்குறைக்கு எலானின் தந்தையும் எலான் மஸ்குக்கு ஆதரவாக நிற்காமல் அவரைத் திட்டித் தள்ளியது என ஒரே சோகம் வழிந்தோடிய நாட்கள் தான் அவை.

மனிதர்களோடு எல்லா இடத்திலும், சகல விதத்திலும் முரண்பட்ட எலானுக்கு, பெறும் ஆறுதல் கிடைத்த இடம் புத்தகங்கள் தான். பதின் வயதிலேயே The Lod of the Rings, The Foundation Series, The Hitchchiker’s Guide to the Galazy போன்ற புத்தகங்கள் சொர்க்க வாசலாக அமைந்தன. அதோடு டெக்னாலஜியும் அவரைத் தன் வலையில் சிக்க வைத்தது.

சுமார் 11 வயதுக்குள்ளேயே கம்ப்யூட்டரில் ப்ரோகிராம் செய்யுமளவுக்கு டெக் காதலில் மூழ்கி முத்தெடுத்தார். அதன் விளைவாக “பிலாஸ்டர்” என்கிற ஒரு வீடியோ கேமையும் உருவாக்கி $500-க்கு ஒரு பத்திரிகையிடம் விற்று காசு பார்த்தார்.

அமெரிக்க குடியுரிமைச் சட்டங்களில் கடுமை காட்டி வரும் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக நிற்கும் எலான் மஸ்கே பூர்வீக அமெரிக்கர் அல்ல. தென் ஆப்பிரிக்காவில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, தாய் உறவு வழி கனடா நாட்டு பிரஜையாகி, அமெரிக்காவில் மாணவர்களுக்கான விசாவில் பிழைப்புக்காக அமெரிக்காவுக்குள் நுழைந்த வெளிநாட்டுக்காரர்.

ஒன்டாரியோவிலுள்ள குவின்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பைத் தொடங்கியவர், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தன் பி ஏ இயற்பியல் & பி எஸ் சி பொருளாதாரப் படிப்பில் தேர்ந்தார். கல்லூரி செலவுகளுக்கு, வீட்டிலேயே பார்ட்டி ஏற்பாடு செய்து, அதில் கலந்து கொள்ள மாணவர்களிடமே வசூல் செய்து பிழைத்தார்.

தன் கல்லூரி படிப்பைத் தொடர்ந்து, கொஞ்ச காலம் சட்ட விரோதமாக அமெரிக்காவில் வேலை பார்த்து வந்ததாக, அவருடைய சகோதரர் கிம்பல் மஸ்க் ஒரு பத்திரிகை நேர்காணலில் கூறினார். ஆனால் அதை எலான் மஸ்க் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இன்று வரை அப்பா எராலுக்கும் எலானுக்கு இடையிலான உறவு ஏழாம் பொருத்தம் தான். அப்பா சரியில்லை என மகன் எலான் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தால், மகன் எலான் சரியில்லை என அப்பா எரால் மற்ற ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பார். அந்த அளவுக்கு அன்பு வழிந்தோடும் ஆனந்தக் குடும்பமது.

ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும், இந்த இருவரும் ஒத்துப் போகிறார்கள் என்றால் அது குழந்தை பெற்றுக் கொள்வதில் மட்டுமே. எரால் மஸ்க், எலான், கிம்பல், டோஸ்கா தவிர, தன் வளர்ப்பு மகள் ஜனா பெஸுடென்ஹாட் (Jana Bezuidenhout) உடன் இணைந்து ஒரு மகன் & ஒரு மகள் என மொத்தம் 5 குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்.

எலான் மஸ்கோ கனடா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சனுடன் 6 குழந்தைகளும் (10 வார காலத்திலேயே இறந்த குழந்தை உட்பட), கனடா நாட்டு இசைக்கலைஞர் கிரிம்ஸ் உடன் மூன்று குழந்தைகளும், நியூரா லிங்கில் தன்னுடன் பணியாற்றிய ஷிவான் சிலிஸ் (Shivon Zilis) உடன் மூன்று குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகளைப் பெற்றுக் கொண்டவர். சமீபத்தில் தன் பெரிய குடும்பத்துக்கென ஆஸ்டின், டெக்சாஸில் அமைந்துள்ள, 3 சொகுசு வீடுகளை உள்ளடக்கிய ஒரு பிரமாண்ட வளாகத்தை, சுமார் $35 மில்லியன் மதிப்பில் வாங்கியுள்ளார் எலான் மஸ்க்.

Asperger’s syndrome

சுமார் 53 வயதாகும் எலான் மஸ்குக்கு ஆஸ்பர்ஜர்ஸ் சிண்ட்ரோம் என்கிற குறைபாடு இருப்பதாக அவரே ஒரு கூட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்தார். ஆஸ்பர்ஜர்ஸ் சிண்ட்ரோம் குறைபாடு உள்ளவர்கள், பொதுவாக, மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் வெளிப்படுத்த முடியாதவர்களாக இருக்கலாம், அதீத கவன சக்தி கொண்டவர்களாகத் திகழலாம், ஒரு விஷயத்தில் அதீத தீவிரம் காட்டக் கூடியவர்களாக இருக்கலாம், சிலர் தங்களை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறிக் கொள்வர் என்கிறது பிபிசி வலைதளம். இந்த குறைபாடு ஒருவரிடம் கண்டுபிடிக்கப்பட்டால், அதை குணப்படுத்த முடியாது என்கிறது Autism.org.uk என்கிற மருத்துவ வலைதளம்.

சரி, மற்ற எல்லா பணக்காரர்களை விடவும், விஞ்ஞானிகளை விடவும், தொழிலதிபர்களை விடவும் எலான் மஸ்க் எங்கு, எப்படி தனித்துவப்படுகிறார். ஏன் மற்ற பில்லியனர்களைக் காட்டிலும் எலான் மஸ்க் பற்றி தெரிந்து கொள்ள சாமானியர்களுக்கு அதீத ஆர்வம் ஏற்படுகிறது. விடை அடுத்த பகுதியில் வெளியாக சூடாகத் தயாராகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.