சென்னை: யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மனித நடமாட்டம் இல்லை என்பதை உறுதிபடுத்தும் விதமாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகள் வழித்தடமாகவும், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகவும் உள்ள கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை பண்ணையைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அந்தப் பண்ணையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யக்கோரி கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு உதவியாக செயல்பட நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் டி.மோகன் அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கல்லாறு தோட்டக்கலைப்பண்ணைக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணையின் இயக்குநர் குமாரவேல்பா்ணடியன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், “கல்லாறு வனப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் யானைகள் வழித்தடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. 21 ஏக்கர் பரப்பில் உள்ள கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் ஆராய்ச்சிப் பணிகளைத் தவிர வேறு எந்தப் பணிகளும் நடைபெறாது. அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து சூரிய சக்தி மின்வேலிகளும் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது.
யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதிநவீன சிசிடிவி கேமராக்களை அப்பகுதி முழுவதும் பொருத்துவதற்கான டெண்டர் பணிகள் நடந்து வருகிறது. சிறுவர் பூங்காவில் இருந்த அனைத்து விளையாட்டு உபகரணங்களும் அகற்றப்பட்டு, கடந்த பிப்.27-ம் தேதி முதல் கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையை பொதுமக்கள் பார்வையிட அனுமதிப்பது கிடையாது. பதப்படுத்தப்பட்ட பழங்கள் உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனையும் அப்பகுதியில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தேவையற்ற கழிப்பிடங்களும் இடிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் எந்தவொரு கட்டுமானங்களும் தோட்டக் கலைப்பண்ணைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படாது. விவசாயிகள், தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கல்லாறு தோட்டக்கலைப் பண்ணை மற்றும் சுற்றியுள்ள வனப்பகுதியில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மனித நடமாட்டம் இருக்காது என்பது குறித்தும், தோட்டக்கலைத்துறை பண்ணையில் காலியாக உள்ள 8 ஏக்கர் நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? என்பது குறித்தும் இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடாதது ஏன்?” என கேள்வி எழுப்பினர்.
பின்னர் கல்லாறு தோட்டக்கலைத்ததுறை இயக்குநர் இதுதொடர்பாக தெளிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை வரும் டிச.2-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.