ஹைதராபாத்: கழுதைப் பண்ணை வைத்தால் பெரும்லாபம் அடையலாம் என ஏமாற்றி ஹைதராபாத்தில் சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த போலி கழுதைப் பண்ணை நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது.
சமீப காலமாக கழுதைப் பால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லதுஎன மக்கள் நம்ப தொடங்கி உள்ளனர். இதனால் கழுதைப்பாலுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை குடிப்பதின் மூலம் உடம்பில் நோய்எதிர்ப்பு சக்தி பெருகும் என மக்கள்நம்புகின்றனர். ஆனால், இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது விவாதத்துக்கு உரியது. ஆனால், இதைப் பயன்படுத்தி சென்னையை சேர்ந்த ஒரு கும்பல், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் உள்ள விவசாயிகளை ஏமாற்றி பல கோடி மோசடி செய்துள்ளது தற்போது அம்பலமாகி உள்ளது.
கழுதைப் பண்ணை மோசடியால் பணத்தை இழந்த வியாபாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் உள்ள ‘டாங்கி பேலஸ் பிரான்சஸி” குழுமம்கரோனா நோய் ஓய்ந்த பின்னர், கழுதை பால் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுமென எங்களை நம்ப வைத்தனர். இதற்காக கழுதை பண்ணை வைத்து அதன் பாலை கறந்து மீண்டும் எங்களுகே கொடுத்தால் ஒரு லிட்டர் ரூ.1,600 வரை வாங்கி கொள்கிறோம் எனவும், அதனை வளர்ப்பதற்கும், தீனி, மருத்துவ செலவையும் நாங்களே பார்த்து கொள்கிறோம் எனவும் கூறி ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதற்காக ஒவ்வொருவரும் ரூ.5 லட்சம் முன்பணம் கொடுக்க வேண்டுமெனவும் கூறினர்.
ஒரு பெண் கழுதை ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரை விற்பனை செய்தனர். முதல் 3 மாதங்கள் வரை பால் கொடுக்கல் வாங்கல் என எல்லாம் சரியாக நடந்தது. அதன் பின்னர் கடந்த 18 மாதங்களாக எவ்வித தொடர்பும் இல்லை. இதுகுறித்து சிலர் கேட்டதற்கு பால் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூ.15 லட்சம் முதல் ரூ.70 லட்சம்வரை காசோலைகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் சொன்ன தேதிக்கு அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்தபோது கணக்கில் பணம் இல்லை எனக்கூறி காசோலைகள் திரும்பிவிட்டன. இதுபோன்று இந்த கும்பல்தெலங்கானா மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் பல கோடிக்கு மோசடி செய்து தலைமறைவாகி உள்ளது. இவர்களிடமிருந்து எங்கள் பணத்தை மீட்டு தாருங்கள். இதற்கு இருஅரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இதுபோன்ற மோசடி கும்பல்களால் மேலும் பலர் ஏமாறாமல் இருக்க கழுதைப் பண்ணை உரிமையாளர் பாபு, உலகநாதன், கிரிசுந்தர், பாலாஜி, சைனிக் ரெட்டி, ரமேஷ் ஆகியோர் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.