கோவை: லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக அமலாக்கத் துறையினர் நேற்றும் சோதனை மேற்கொண்டனர்.
சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டியதாக, கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. தொடர்ந்து வருமான வரித் துறை, அமலாக்கத் துறையினர் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் பலமுறை சோதனை மேற்கொண்டனர்.
ஏற்கெனவே நடந்த சோதனைகளைத் தொடர்ந்து, பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 14-ம் தேதி முதல் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை துடியலூரை அடுத்த வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள மார்ட்டின் வீடு, அருகேயுள்ள அவரது கார்ப்பரேட் அலுவலகம், ஓமியோபதி கல்லூரியில் நேற்று 3-வது நாளாக சோதனை நடந்தது.
அதேபோல, சாய்பாபாகாலனி மற்றும் சிவானந்தாபுரம் ஆகிய இடங்களில் உள்ள, மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் மார்டினின் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். மொத்தம் 5 இடங்களில் சோதனை நடந்தது. அப்போது, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், சென்னையில் நேற்று சோதனை எதுவும் நடைபெறவில்லை.