டெக்ஸாஸ்,
அமெரிக்காவில் 1980-ம் ஆண்டின் பிற்பகுதியில் பிரபல குத்து சண்டை வீரராக இருந்தவர் மைக் டைசன் . 1987-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை உலக ஹெவிவெயிட் சாம்பியனாக வலம் வந்தவர் மைக் டைசன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற டைசன், குத்துச்சண்டையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். 20 வயதில் ஹெவிவெயிட் சாம்பியனாகி, உலக சாதனை படைத்தார். களத்தில் இவரைக் கண்டு அஞ்சாத எதிரிகளே இல்லை. இவரை ரோல் மாடலாக கொண்டு குத்து சண்டையில் இந்திய வீரர்கள் பலர் கலக்கி வருகின்றனர்.
இந்தநிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குத்துசண்டையில் மைக் டைசன் களமிறங்கியுள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 31 வயதான பிரபல யூடியூபரான குத்துசண்டை வீரர் ஜாக்பாலை எதிர்த்து நாளை களமிறங்கவுள்ளார்.
இதற்கிடையில் போட்டியின் அறிமுக விழாவில் சக போட்டியாளரான ஜாக்கை மைக் டைசன் திடீரென கன்னத்தில் அறைந்தார். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. போட்டிக்கு முன்னரே இருவர் இடையிலான மோதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே போட்டியில் மைக் டைசன் நாக் அவுட் ஆவது உறுதி என ஜாக்பால் தெரிவித்துள்ளார்.
ஜாக்பால் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் எதிராளியை 7 முறை நாக் அவுட் செய்தது உட்பட 10 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளார். அதே போல் டைசன் சிறந்த வீரர் என்றாலும் வயதை கவனத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு குத்துச்சண்டை களத்துக்கு திரும்பி உள்ள மைக் டைசனை காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.