ஊரெங்கும் ஒரே தும்மலும், காய்ச்சலுமாக இருக்கிறது. சிலர், ‘உடலெல்லாம் வலிக்கிறது’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் ‘காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது’ என டெங்கு பரிசோதனை செய்துகொள்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன; இது என்ன காய்ச்சல் என்று சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷிடம் கேட்டோம்.
”கடந்த சில மாதங்களாகவே பருவகால மாற்றத்தால் வருகிற காய்ச்சலுடன் வைரல் மூச்சுப்பாதைத் தொற்று, சிக்கன் குனியா மற்றும் ஆங்காங்கே டெங்கு என மூன்று வகையான காய்ச்சல் தமிழகமெங்கும் இருக்கிறது” என்றவர், அதன் அறிகுறிகள், தீர்வுகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொண்டார்.
வைரல் மூச்சுப்பாதைத் தொற்றும் காய்ச்சலும்…
இந்தப் பிரச்னையில் இருமல், தும்மல், கை-கால் வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தும்மல் அதிகமாக வருகிறது என்பதால், அதன் மூலமாகவே மற்றவர்களுக்கும் பரவி வருகிறது. அதனால், மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள். மற்றவர்கள், கொஞ்ச நாளைக்கு மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களைத் தவிருங்கள். மற்றபடி, பயப்பட தேவையில்லை.
இன்னொரு தகவல். சிலருக்கு வைரஸ் தொற்றால் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. இவர்கள், ஓ.ஆர்.எஸ் கரைசல் குடித்து உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சோர்வாக உணரும்பட்சத்தில், உடனே மருத்துவரை பார்த்துவிடுவது நல்லது.
சிக்கன் குனியா…
இதில், முதலில் காய்ச்சல் வரும். கூடவே லேசாக உடல் வலியும் இருக்கும். இந்தப் பிரச்னையில் சளி, இருமல், தும்மல் பெரியளவில் இருக்காது. காய்ச்சல்கூட பொதுவாக ஒன்றிரண்டு நாள்கள்தான் இருக்கும். சிலருக்கு ஒருநாள் மட்டுமே இருக்கும். சிலருக்கு மட்டும் 3 முதல் 4 நாட்கள் வரை இருக்கும். காய்ச்சல் சரியான பிறகுதான், உடலின் ஜாயின்ட்களில் வலி வர ஆரம்பிக்கும். இந்த வலி பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு வாரம் அல்லது பத்து நாளில் சரியாகி விடும். சிலருக்கு மட்டும் 2 அல்லது 3 மாதம் அல்லது அதற்கு மேலும்கூட வலி இருக்கும். காய்ச்சல் வந்தவுடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டாலே போதும். இந்தக் காய்ச்சலுக்கும் பயப்பட தேவையில்லை.
டெங்கு…
டெங்கு வந்தால், காய்ச்சல் அடிக்கும். கூடவே கண்களுக்குள்ளும் வயிற்றின் மேல் பகுதியிலும் வலி இருக்கும். டெங்கு காய்ச்சல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருந்து, நடுவில் ஒருநாள் இருக்காது. பிறகு மறுபடியும் காய்ச்சல் வரும். இந்தக் காய்ச்சலும் பெரும்பான்மையானவர்களுக்கு பெரியளவில் தொல்லைக் கொடுக்காது. மருத்துவரைப் பார்த்து மாத்திரை எடுத்துக்கொண்டாலே சரியாகி விடும்.
டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு, காய்ச்சல் ஆரம்பித்த 5-வது நாளில் இருந்து 7-வது நாளில் தட்டணுக்கள் (பிளேட்லெட்ஸ்) குறைய ஆரம்பிக்கும். டெங்கு வந்தால் பெரும்பாலும் 5-வது நாள் காய்ச்சல் சரியாகி விடும். தட்டணுக்கள் குறைவது நபருக்கு நபர் மாறுபடும். நார்மலாக இருப்பவர்களுக்கு, ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில் 1.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை தட்டணுக்கள் இருக்கும். இது சிலருக்கு ஒரு லட்சத்திலிருந்து 80 ஆயிரம் வரை மட்டுமே குறையும். இன்னும் சிலருக்கு 70 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரைக்கும் குறையும். ஒருசிலருக்கு 20 ஆயிரத்துக்கும் கீழ் தட்டணுக்கள் குறையும். டெங்கு காய்ச்சலுக்கு பயப்பட வேண்டியதில்லை. ஆனால், தட்டணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக குறைந்தால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த தட்டணுக்கள்தான் உடலில் ரத்தம் வெளியேறக்கூடிய இடங்களில் அப்படி நிகழாமல் ரத்தத்தை உறைய வைக்கும். தட்டணுக்கள் குறையும்போது, ஒருசிலருக்கு உடல் உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்படலாம். அதனால், டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை மருத்துவருடைய ஆலோசனை மிக மிக அவசியம். வெறும் மாத்திரைகள் மட்டும் போதுமா அல்லது நரம்பு வழியாக திரவம் ஏற்ற வேண்டுமா அல்லது தட்டணுக்கள் ஏற்ற வேண்டுமா என மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
அதனால், டெங்கு காய்ச்சல் வந்தாலோ அல்லது விட்டு விட்டுக் காய்ச்சல் வந்தாலோ, காய்ச்சல் வந்த 5-வது நாளில் இருந்து கவனமாக இருக்க வேண்டும். வாந்தி, பசியின்மை, உடலில் நீர்ச்ச்சத்து குறைதல், மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால், பாதிக்கப்பட்டவர் கஞ்சி, பழச்சாறு, இளநீர் என அருந்தி உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கவனமாக இருக்க வேண்டியவை…
பருவ கால மாற்றத்தால் வருகிற காய்ச்சலுக்கு, மருந்து, மாத்திரை, ஓய்வு போதும். சிக்கன் குனியா, டெங்கு ஆகிய இரண்டுமே கொசுக்களால் வருவதால், வீட்டைச் சுற்றி சிரட்டைகளில், பிளாஸ்டிக், கல்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மலேரியாவை ஏற்படுத்தும் கொசுக்கள் இரவில் கடிக்கும். சிக்கன் குனியா, டெங்கு ஏற்படுத்தும் கொசுக்களோ பகலில் கடிக்கும். அதனால், பகல் நேரங்களில் உடல் முழுவதும் மறையும்படி உடை உடுத்திக்கொள்ளுங்கள். மற்றபடி, எந்தக் காய்ச்சலுக்கும் நீங்கள் பயப்பட தேவையில்லை.”