புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் தொடர்பாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் திங்கள்கிழமை மதியத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஜார்க்கண்டில் கடந்த 13-ம் தேதி முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலத்தில் வரும் 20-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநிலங்களிலும் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியதாக காங்கிரஸ் சார்பில் கடந்த 14-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதில், “முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி குறித்து மோடியும் அமித் ஷாவும் அவதூறாக பேசினர். அவர்களது பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டு இருந்தது.
இதனிடையே, அரசமைப்பு சாசனம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பொய்களை பரப்பி வருவதாக குற்றம் சாட்டி பாஜக சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது.
இரு தேசிய கட்சிகளின் புகார்கள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் தீவிர ஆய்வு நடத்தியது. இந்த சூழலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அளித்த புகார்கள் தொடர்பாக திங்கள்கிழமை மதியம் 1 மணிக்குள் விரிவான பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் இரண்டு கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.