மும்பை: ஜோ பைடனை போலவே பிரதமர் மோடியும் நினைவாற்றல் இழப்பால் அவதிப்பட்டு வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும் ‘மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைக்கான தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. அமராவதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசியது: “மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், இரண்டு கட்சிகளை உடைத்த பாஜக, பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்து விட்டது.
தற்போது மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. நாம் யாரென்று அவர்களுக்குக் காட்டுவோம். மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் காத்திருக்கின்றனர். இதன்மூலம் மகாராஷ்டிர மக்களுக்கு நன்மை கிடைக்கும். அரசியலமைப்பு சட்டம்தான் இந்தியாவின் டிஎன்ஏ-வாக உள்ளது. ஆனால் அதை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெற்றுப் புத்தகமாக கருதுகின்றன. பாஜக அரசுக்கு மக்களுக்கான அரசு அல்ல. தொழிலதிபர்களுக்கான அரசாக உள்ளது. இதுவரை தொழிலதிபர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும், 50 சதவீத இடஒதுக்கீட்டை நீக்கவேண்டும் என்றும் நான் மக்களவையில் பேசினேன். ஆனால் நான் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்ற ரீதியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். மோடியின் உரையை கேட்டதாக என் சகோதரி என்னிடம் கூறினார். அந்த உரையில், நாம் எதைச் சொன்னாலும், மோடியும் அதையே திரும்பி சொல்வதாக அவர் கூறினார். எனக்கு தெரியாது, ஒருவேளை அவர் நினைவாற்றலை இழந்திருக்கலாம். அவருக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் (ஜோ பைடன்) போல நினைவாற்றல் இழப்பு (மெமரி லாஸ்) ஏற்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். இப்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவன் ராகுல் காந்தி என்று கூட பிரதமர் மோடி பேசக்கூடும்.
தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக நான் நிற்கிறேன். என்னுடைய புகழைக் கெடுக்க பாஜகவினர் கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கின்றனர். யாரைக் கண்டும் நான் அஞ்சமாட்டேன். மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். விவசாயிகளையும், சிறு வியாபாரிகளையும் கொல்வதற்காகவே ஜிஎஸ்டியும், பணமதிப்பிழப்பும் கொண்டு வரப்பட்டது” என்று அவர் பேசினார்.