ஹைதராபாத்: “இந்தியாவில் 50 சதவீத மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேரவேண்டுமென்றால் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர வேண்டும்” என்று நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல்கலைக்கழக எண்ணிக்கை, டிஜிட்டல் கட்டமைப்பு குறித்து நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சுப்ரமணியம் நேற்று முன்தினம் பேசுகையில், “இந்தியாவில் தற்போது 1,200 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 4 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை கல்லூரி படிக்கும் வயதினரில் 29 சதவீதம் மட்டுமே. 50 சதவீத பேர் கல்லூரி படிப்பில் இணைய வேண்டுமென்றால், நாட்டின் பல்கலைக்கழக எண்ணிக்கை 2,500 ஆக உயர வேண்டும்.
120 கோடி பேருக்கு வங்கி கணக்கு டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியா முன்னுதாரண நாடாக உள்ளது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில், 120 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு உள்ளது. இந்தியாவின் வலுவான டிஜிட்டல் கட்டமைப்பால் நம்மால் பல்வேறு விஷயங்களை பரிசோ தித்துப் பார்க்க முடிகிறது. இந்தியாவின் யுபிஐ மிக முக்கியமான உருவாக்கம். இன்று உலக அளவில் நிகழும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் 50 சதவீதம் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது. மாதத்துக்கு 1,000 கோடி பரிவர்த்தனைகள் இங்கு நிகழ்கின்றன.
30 டிரில்லியன் டாலர்: 2047-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன வளர்ந்த நாடாக மாற ஆய்வும் புதிய கண்டுபிடிப்புகளும் மிக முக்கியம் ஆகும். ஏஐ மற்றும் செமிகண்டக்டர் சார்ந்து மத்திய அரசின் முன்னெடுப்பு, நாட்டின்வளர்ச்சியை மேம்படுத்தும்” என்று தெரிவித்தார்.