லக்னோ: உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. காயமடைந்த 16 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் (என்ஐசியு) நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 குழந்தைகள் உயிரிழந்தன. 16 குழந்தைகள் காயமடைந்தன. காயமடைந்த குழந்தைகள் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த அவசர சிகிச்சை பிரிவில் 54 குழந்தைகள் அனுமதிக்கப் பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. விபத்து குறித்து செய்தியாளர்களிடம் ஜான்சி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார் கூறும்போது, “தீ விபத்து ஏற்பட்டநிலையில், அவசர சிகிச்சை பிரிவின்வெளி பகுதியில் இருந்த குழந்தைகள், உள் பகுதியில் இருந்த சில குழந்தைகள் மீட்கப்பட்டனர். 10 குழந்தைகள் உயிரிழந்தன. காயமடைந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார். விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர், மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது பார்ப்போர் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.
அரசுகள் ரூ.7 லட்சம் நிவாரணம்: இந்த சோக சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரிவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வேதனையும், இரங்கலும் தெரிவித்துள்ளனர். தீ விபத்து சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். மாநில அரசு சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதை விசாரணை மூலம் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மக்களவை எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர். தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி 12 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜான்சி வட்டாட்சியருக்கும், டிஐஜிக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
3 அடுக்கு விசாரணை: இதற்கிடையே, தீ விபத்து நடந்த அவசர சிகிச்சை பிரிவில் இருந்து நர்ஸ் ஒருவர் வெளியே ஓடி வந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்தான் தீ விபத்தை ஏற்படுத்தினாரா என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. தீ விபத்து தொடர்பாக 3 அடுக்கு விசாரணை நடத்தப்படும். 4 பேர் கொண்ட கமிட்டி இந்த விசாரணையை மேற்கொண்டு, ஒரு வாரத்தில் அறிக்கையை வழங்கும் என்று தெரியவந்துள்ளது.