ராஞ்சி: ஜார்க்கண்ட் மதரசாக்களில் வங்கதேச முஸ்லிம்கள் பதுங்கி உள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வருகின்றனர். இதற்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு ஆதரவு அளிக்கிறது என்று மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா குற்றம் சாட்டி உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. வரும் 20-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டம், கோமியா பகுதியில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஜார்க்கண்ட் மாநில மதரசாக்களில் வங்கதேச முஸ்லிம்கள் பதுங்கி உள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக குடியேற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு ஆதரவு அளிக்கிறது. அவர்களுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, சமையல் காஸ் இணைப்பு, ரேஷன் அட்டை கிடைக்க மாநில அரசு ஏற்பாடு செய்கிறது. இறுதியில் அவர்களுக்கு நிலங்களையும் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசு ஒதுக்குகிறது.
ஜார்க்கண்டின் நீர், வனம், நிலத்தை முதல்வர் ஹேமந்த் சூறையாடி வருகிறார். வங்கதேச ஊடுருவல்காரர்கள் ஜார்க்கண்ட் பழங்குடி பெண்களை திருமணம் செய்து அவர்களின் நிலங்களை பறிக்கின்றனர். மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் இதை தடுக்க சட்டம் இயற்றப்படும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால் மட்டுமே ஊடுருவலை தடுக்க முடியும்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி உள்ளனர். அவர்களில் பலர் ஜாமீனில் வெளியே உள்ளனர். எந்த நேரமும் அவர்கள் மீண்டும் சிறைக்கு செல்வார்கள்.
முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் மீண்டும் சிறைக்கு செல்வது உறுதி. அவர் மீது ரூ.5,000 கோடி சுரங்க ஊழல், ரூ.236 கோடி நில மோசடி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் ஓபிசி பிரிவை சேர்ந்த அமைச்சர்கள் எத்தனை பேர் இருந்தனர் என்பதை காங்கிரஸ் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஓபிசி பிரிவை சேர்ந்த 27 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி அரசு பழங்குடி மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. பட்டியலின மக்கள், விவசாயிகளுக்கு எதிராகவும் மாநில அரசு செயல்படுகிறது. ஊழல், வாக்கு வங்கி அரசியலை மட்டுமே முன்னிறுத்துகிறது.
ஜார்க்கண்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சார்பில் ஏற்கெனவே ரூ.19 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதலாக ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஜார்க்கண்டில் 5 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மருத்துவ கல்லூரிக்கும் மத்திய அரசு சார்பில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு ஜே.பி. நட்டா பேசினார்.