தாழ்தள பேருந்துகளில் உள்ள பணி சிரமத்தை போக்க நடவடிக்கை: அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம்

சென்னை: தாழ்தள பேருந்துகளில் பணியாற்றுவதில் இருக்கும் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்து அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பாரதிய போக்குவரத்து தொழிலாளர் பேரவை பொதுச்செயலாளர் பி.கருணாகரன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ”மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம், 12மீ நீளம் கொண்ட பேருந்தை பணிமனையில் இருந்து எடுத்து, விடுவதிலும், குறுகலான சாலைகளில் இயக்குவதிலும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இதனாலேயே இப்பேருந்தை இயக்குவதற்கு பெரும்பாலான நடத்துநர்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, முன்பு தொடர் பேருந்து இயக்கப்பட்டபோது, ஓட்டுநர்களுக்கு சிறப்பு ஊதியம் அளித்து ஊக்குவித்ததை போல, தாழ்தள பேருந்து ஓட்டுநர்களுக்கு ஷிப்ட் ஒன்றுக்கு ரூ.100 சிறப்புப் படியாக வழங்க வேண்டும். தாழ்தள பேருந்து வழித்தடங்களில் நெரிசல் நேரங்களில் 90-க்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர்.

அப்போது ஒரே நடையில் ரூ.4,500-க்கு மேலாக வசூலாகிறது. இதற்கிடையே, பயண அட்டை சரிபார்த்தல், பேருந்துகளை பின்னால் இயக்க உதவுதல், மாற்றுத்திறனாளிகளை ஏற்றி, இறக்க உதவுதல் போன்ற பல சிரமங்களை எதிர்கொள்கிறோம். இதனால் அட்டவணைப்படி பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உருவாகிறது. எனவே, நடத்துநர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் தாழ்தள பேருந்துகளில் இரண்டு நடத்துநர்களை பணிக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.