நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைப்பு: எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவர் ‘அரசியல் அராஜகம் ஒழியட்டும்’ என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் எழும்பூர் போலீஸாரும், மதுரை போலீஸாரும் தனித்தனியாக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் அவர் தங்கி இருக்கும் தகவல் சென்னை தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று நடிகை கஸ்தூரியை சனிக்கிழமை கைது செய்தனர்.

நவ.29 வரை நீதிமன்றக் காவல்: பின்னர் அவரை வாடகை கார் மூலம் சாலை மார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை சென்னை அழைத்து வந்தனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்தவுடன், நடிகை கஸ்தூரியை எழும்பூர் 5-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ரகுபதி ராஜா முன்னிலையில் போலீஸார் ஆஜர்ப்படுத்தினர். அப்போது அவரை வரும் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் ரகுபதி ராஜா உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகை கஸ்தூரியை போலீஸார் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

‘என்னை சிறையில் அடைக்க வேண்டாம்’: நடிகை கஸ்தூரியிடம் விசாரணை நடத்தப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை துணை ஆணையர் அலுவலகத்திலும், எழும்பூர் நீதிமன்றத்திலும் அவருக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. வழக்கறிஞர் ஒருவர் மட்டும் உடன் இருந்தார்.

எழும்பூர் மாஜிஸ்திரேட் ரகுபதி ராஜா முன்னிலையில் போலீஸார் ஆஜர் செய்தபோது அவர் உருக்கமாக காணப்பட்டார். போலீஸார், கஸ்தூரி மீதான குற்றச்சாட்டு மற்றும் கஸ்தூரியின் பேச்சால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும், அவர் மீது என்னென்ன சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் மாஜிஸ்திரேட்டிடம் எடுத்துக் கூறினார்கள். இதை அவர் பதிவு செய்துகொண்டார்.

பின்னர் மாஜிஸ்திரேட் ரகுபதி ராஜா, நடிகை கஸ்தூரியிடம், ‘உங்களை கைது செய்து அழைத்து வரும்போது போலீஸார் கொடுமைப்படுத்தினார்களா? என்று கேட்டார். அதற்கு கஸ்தூரி, ‘போலீஸார் நல்ல முறையில் அழைத்து வந்தனர். தொந்தரவு தரவில்லை’ என கூறினார்.

தொடர்ந்து அவர் மாஜிஸ்திரேட்டிடம், ‘நான் தனிமையில் வசித்து வருகிறேன். கணவர் ஆதரவு கிடையாது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஹைதராபாத்தில் படிக்க வைத்துள்ளேன். தெலுங்கு பட ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் சென்றிருந்தேன். நான் தலைமறைவாகவில்லை.

என்னுடைய சென்னை வீட்டில் போலீஸார் சம்மன் ஒட்டிய தகவல் எனக்கு தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தை பரிதவிப்புக்கு ஆளாகும். எனவே, என்னை சிறையில் அடைக்காமல், ஜாமீனில் விடுதலை செய்யுங்கள்’ என அவர் உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். ஆனால் அவருடைய வேண்டுகோளை மாஜிஸ்திரேட் நிராகரித்தார்.

நடிகை கஸ்தூரியை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்தபோது சிரித்த முகத்துடன் காணப்பட்டார். விசாரணை முடிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு போலீஸார், காவல் வேனில் ஏற்றியபோது அவர், ‘அரசியல் அராஜகம் ஒழியட்டும். நீதி வெல்லட்டும்’ என்று ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோன்று சிறைக்கு அழைத்து செல்லப்பட்டபோதும் அவர் போலீஸ் வாகனத்தில் கோஷங்கள் எழுப்பியபடி சென்றார்.

பின்னணி என்ன? முன்னதாக, பிரமாணர் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர். எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரைப்பட நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன.

இதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அதே வேளையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன்படி, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நடிகை கஸ்தூரி மீது 4 சட்ட பிரிவுகளில் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற சம்மனை வழங்குவதற்கு கடந்த 10-ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு எழும்பூர் போலீஸார் சென்றனர்.

அப்போது அவர் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவானது தெரியவந்தது. இதற்கிடையே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாயுடு மகாஜன சங்கம் சார்பில் மதுரை திருநகர் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கஸ்தூரி தலைமறைவாக இருந்தப்படி இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார்.

கஸ்தூரி மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த 12-ம் தேதி விசாரித்தார். அப்போது அவர், நடிகை கஸ்தூரி வன்முறையை ஏற்படுத்த காத்திருக்கும் வெடிகுண்டுபோல பேசி உள்ளார் என்று கருத்து தெரிவித்து, அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.