மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஏராளமான அரசியல் தலைவர்களின் வாரிசுகள் போட்டியிடுகின்றனர். உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே மகன்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதுதவிர உறவுகளே ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்த விலாஸ் ராவ் தேஷ்முக் திடீரென அகால மரணம் அடைந்தார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் காலமானார். அவரது வாரிசுகளில் ரிதேஷ் தேஷ்முக் நடிகை ஜெனிலியாவை திருமணம் செய்து கொண்டு திரைப்படத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். மற்ற இரு சகோதரர்கள் அரசியலில் இருக்கின்றனர். மராத்வாடாவில் உள்ள லாத்தூர் நகர தொகுதியில், அமித் தேஷ்முக் ஏற்கெனவே மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இப்போது நான்காவது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
மராத்வாடாவை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டுமானால் அமித் தேஷ்முக்கிற்கு இம்முறை நடக்கும் தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் அவசியம். இதே போன்று மற்றொரு மகனான தீரஜ் தேஷ்முக் லாத்தூர் ரூரல் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தான் விலாஸ் ராவ் தேஷ்முக் மகன் என்பதை தாண்டி தன்னை மக்கள் மத்தியில் சிறந்த தலைவர் என்று நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
தீரஜ் தேஷ்முக்கை எதிர்த்து பா.ஜ.க சார்பாக சட்டமேலவை உறுப்பினர் ரமேஷ் கராட் போட்டியிடுகிறார். இதனால் இம்முறை கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ள தீரஜ் தேஷ்முக் தொகுதி பக்கம் அதிகமாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம, விவசாயிகள் பிரச்னை, தந்தையின் செல்வாக்கு, கரும்புதோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் என தீரஜ் தேஷ்முக்கிற்கு ஆதரவுகள் அதிகம் இருந்தாலும், மாநில அரசு கொண்டு வந்துள்ள பெண்களுக்கான ரூ.1500 வழங்கும் திட்டம் எதிர்க்கட்சிகளை அச்சம் அடைய செய்திருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த தீரஜ் தேஷ்முக், ஆரம்பத்தில் காங்கிரஸ் மராத்தாக்களுக்கு 14 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. ஆனால் தற்போதைய அரசு இட ஒதுக்கீடு குறித்து தெளிவுபடுத்த தவறிவிட்டது. மராத்தா சமுதாயத்தையும், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சமமாக நடத்த தவறியதால்தான் இப்போது பதட்டம் நிலவுகிறது. மராத்தா சமுதாயத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள அரசு தவறிவிட்டது”என்றார்.
லாத்தூர் மக்களவை தொகுதி 10 ஆண்டுகளாக பா.ஜ.க வசம் இருந்தது. ஆனால் கடந்த தேர்தலில் லாத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் இம்முறை வெற்றி எழுது என்று தேஷ்முக் சகோதரர்கள் கருதுகின்றனர். தேஷ்முக் சகோதரர்கள் குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,” அமித் கூர்மையான, அனைத்தையும் கவனிக்கும் தன்மை கொண்டவர். ,அனைவரிடமும் இணக்கமான நடந்து கொள்வது மற்றும் அரசியல் புத்திசாலித்தனம் எனக்கு விலாஸ்ராவ் தேஷ்முக்கை நினைவுபடுத்துகிறது. தீரஜ் இப்போதுதான் அரசியல் கற்றுக்கொண்டிருக்கிறார்”என்றார்.
சகோதரர்கள் இரண்டு பேருக்காகவும் ரிதேஷ் தேஷ்முக் லாத்தூர் மற்றும் அதனை சுற்றிய பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அமித் தேஷ்முக்கை எதிர்த்து அர்ச்சனா பாட்டீல் போட்டியிடுகிறார். தந்தையின் கோட்டையாக கருதப்படும் லாத்தூரை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியில் தேஷ்முக் சகோதரர்கள் இருக்கின்றனர்.
தந்தையை எதிர்த்து மகள் போட்டி
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் அஹ்ரி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சார்பாக தந்தை மற்றும் மகள் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் சார்பாக பாபா தர்மராவ் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் சார்பாக பாபாவின் மகள் பாக்யஸ்ரீ போட்டியிடுகிறார். 1991ம் ஆண்டு நக்சலைட்கள் பாபா தர்மராவை கடத்திச்சென்றனர். அவரை விடுவிப்பதில் சரத்பவார் முக்கிய பங்கு வகித்தார். எனவேதான் சரத்பவார் கட்சியில் போட்டியிடுவதாக பாக்யஸ்ரீ தெரிவித்துள்ளார்.