அஸ்வின், ஜடேஜாவுக்கு இடமில்லை… இதுதான் பிளேயிங் லெவன் – இக்கட்டில் இந்திய அணி!

India vs Australia Perth Test: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் (Border Gavaskar Trophy) ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் (India vs Australia) மோதும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தொடர் நடைபெறும் நிலையில், இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இந்த முறை இத்தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. 

பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் (Perth Optus Stadium) வரும் நவ. 22ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் போட்டிக்கு பின்னர் இந்திய அணி (Team India) ஒரு பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. அதன்பின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் டிச.6ஆம் தேதிதான் நடைபெறுகிறது. முதல் போட்டி நவ. 26ஆம் தேதி நிறைவடையும் நிலையில், அடுத்த போட்டிக்கு சுமார் 10 நாள்கள் இடைவெளி இருக்கிறது.

கச்சிதமான பிளேயிங் லெவன் தேவை

மேலும், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணியே இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்கக்கூடாது. ஆஸ்திரேலிய அணியும் (Team Australia) வெற்றியை குறிவைத்தே களமிறங்குகிறது. எனவே, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி தரப்பில் முதல் போட்டியில் இருந்தே அனல் பறக்கும் எனலாம். அந்த வகையில், இரு அணிகளும் சரியான பிளேயிங் லெவனை தேர்வு செய்வது அவசியம் ஆகும்.

அந்த வகையில், இந்திய அணியை பொறுத்தவரை ரோஹித் சர்மாவுக்கு (Rohit Sharma) ஆண் குழந்தை பிறந்திருப்பதால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு தற்போது செல்லவில்லை. முதல் போட்டியை மட்டும் அவர் தவறவிடுவதாக கூறப்படுகிறது. முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக இருப்பார். அதேபோல், பயிற்சியின்போது சுப்மான் கில் கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் (Shubman Gill Injury) அது குணமடைய இரண்டு வாரம் எடுக்கும் எனவும் கில்லும் முதல் போட்டியை தவறவிடுவார் என்றும் தெரிகிறது.

டாப் ஆர்டரில் முக்கிய மாற்றம்

இந்நிலையில், ரோஹித் சர்மாவின் ஓப்பனிங் இடத்தையும், சுப்மான் கில்லின் மூன்றாவது இடத்தையும் நிரப்ப இந்திய அணி சில மாற்றங்களை செய்தாக வேண்டும். அபிமன்யூ ஈஸ்வரன் ஓப்பனிங்கில் இறங்கலாம் என்றாலும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் அவர் சொதப்பியதால் அந்த இடத்திற்கு கேஎல் ராகுலை (KL Rahul) இறக்க இந்திய அணி திட்டமிட்டிருந்தது. தற்போது சுப்மான் கில்லின் காயம், கேஎல் ராகுலை ஓப்பனிங் ஸ்பாட்டிற்கு உறுதிசெய்திருக்கிறது. எனவே ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஓப்பனிங் வருவார். 

மேலும், ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன் உள்ளிட்ட இந்திய ஏ அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப உள்ள நிலையில், அதில் தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) மட்டும் ஆஸ்திரேலியாவிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. அது உறுதியாகும் பட்சத்தில், சுப்மான் கில்லின் இடத்தை தேவதத் படிக்கல் நிரப்புவார் எனலாம்.

இந்திய அணியின் காம்பினேஷன்

முதல் தர போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டிகளிலும் படிக்கல் மிடில் ஆர்டரில் தொடர்ச்சியாக ரன்களை குவித்தார். எனவே அவரை இந்திய அணி முதல் போட்டியில் விளையாட வைக்கும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் விராட் கோலி, ரிஷப் பண்ட், துருவ் ஜூரேல் ஆகியோரும் இடம்பிடிப்பார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் துருவ் ஜூரேல் இரண்டு அரைசதங்களை பதிவு செய்தார். 

பெர்த் மைதானத்தில் பவுன்ஸ், வேகம் அதிகம் இருப்பதால் சுழற்பந்துவீச்சாளர்களின் தேவை அதிகம் இருக்காது. எனவே, வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவியளிப்பதற்கு மட்டும் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளர் இருப்பார். அந்த வகையில், அஸ்வின் (Ravichandran Ashwin) மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என தெரிகிறது. வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ரா, ஆகாஷ் தீப், சிராஜ் ஆகியோர் இடம்பெறுவார்கள். இவர்களுக்கு துணையாக 7ஆவது இடத்தில் நிதிஷ்குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) விளையாடுவார் என தெரிகிறது. இது அவருக்கு அறிமுக டெஸ்ட் போட்டியாக இருக்கும்.

இதில் மாற்றம் வேண்டுமா…?

6 பேட்டர்கள், 2 ஆல்ரவுண்டர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற பார்மட்டிலேயே இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை கட்டமைக்கும் என தெரிகிறது. இதில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதில் சர்ப்ராஸ் கானை சேர்த்தால் கூடுதல் பேட்டர் கிடைப்பார், ஆனால் பந்துவீச்சு சற்று பின்னடைவை சந்திக்கும். அஸ்வினையோ, ஜடேஜாவையோ (Ravindra Jadeja) சேர்த்தால் அவர்கள் பெர்த் மைதானத்தில் மிக கடினம் எனலாம். எனவே, நிதிஷ்குமார் ரெட்டி விளையாடுவதே அணிக்கு சமநிலையை அளிக்கும். சிராஜ் இடத்தில் ஹர்ஷித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகோயிர் ஒருவர் விளையாடலாம். இருப்பினும் அதுவும் கம்பீரின் கைகளிலேயே உள்ளது. 

இந்திய அணி பிளேயிங் லெவன் (கணிப்பு): யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.