கேஜ்ரிவாலுக்கு அடுத்தடுத்து ‘அடி’… டெல்லியில் ‘வீக்’ ஆகிறதா ஆம் ஆத்மி?

தேசியத் தலைநகர் டெல்லியில் புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கி ஏற்கெனவே அங்கு கோலோச்சியிருந்த காங்கிரஸ் அரசை ஓரங்கட்டி ஆட்சியமைத்து, அடுத்தடுத்து அந்த ஆட்சியைத் தக்கவைத்ததோடு “நாடு முழுவதும் ‘மோடி அலை’ வீசட்டும் ஆனால் அது ‘ஆம் ஆத்மியை’ ஒன்றும் செய்துவிடாது” என சவால் விடுத்து சிம்ம சொப்பனமாக கர்ஜித்து வந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு சமீப காலமாக அடுத்தடுத்த அடிகள் விழுந்த வண்ணம் உள்ளன.

ஓர் இயக்கமாகி உருவாகி… ஓர் இயக்கமாக உருவாகி கட்சியாக நிலை நிறுத்திக் கொண்டுள்ள ஆம் ஆத்மியின் வளர்ச்சி என்பது இன்றளவும் மாநிலங்களில் புதிதாக கட்சி தொடங்குபவர்களுக்கு வழிகாட்டி என்றால், அது மிகையல்ல. புதிதாக கட்சி தொடங்கினால் ஆம் ஆத்மி வளர்ச்சிப் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம் என்று ரெஃபரன்ஸ் எடுத்துக் கொண்டவர்களில் தமிழகத்தின் மநீம தலைவர் கமல்ஹாசனையும் கூட நாம் பட்டியலிடலாம்.

2011-ல் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் தலைமையில் ஊழலுக்கு எதிரான பேரியக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த இயக்கத்தின் சார்பில் ஜன் லோக்பால் மசோதாவுக்காக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடந்தன. அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்ட மேடை உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தது. ஹசாரேவுடன் சேர்ந்து வெளிச்சத்துக்கு வந்தவர்தான், அவரின் தளபதிகளில் ஒருவராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால்.

ஆக.2.2012-ல் டெல்லி ஜந்தர் மந்தரில் அன்னா ஹசாரேவுடன் அரவிந்த் கேஜ்ரிவால்

ஐஆர்எஸ் பதவியில் இருந்த அவர், விருப்ப ஓய்வு பெற்றிருந்தார். அன்னா ஹசாரே போராட்டங்களுக்குக் கிடைத்த முக்கியத்துவத்தால் அந்த இயக்கத்துக்கு அரசியல் முகம் கொடுக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் முயற்சித்தார். ஆனால், ஹசாரே அதற்கு இசையவில்லை. இருந்தாலும் தன் எண்ணத்துக்கு வடிவம் கொடுத்தார். 2012 நவம்பர் 26-ல் டெல்லியில் ஆம் ஆத்மி என்ற கட்சியை அரவிந்த் கேஜ்ரிவால் தொடங்கினார். இதோ இப்போது ஆம் ஆத்மி 13-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

ஆம் ஆத்மியை அரவிந்த் கேஜ்ரிவால் ஆரம்பித்தபோது, சமூக செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், ஊழலுக்கு எதிரான பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்களும் ஆம் ஆத்மியில் ஆர்வத்துடன் இணைந்தனர். காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக உருவாகலாம் அன்றே அரசியல் கட்டுரைகள் பலவும் கணிப்புகளைத் தாங்கி வந்தன. அந்தக் கணிப்புகள் பொய்க்கவில்லை. கடந்த 2013 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்ட ஆம் ஆத்மி, அதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது. அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வாராக பதவியேற்றார்.

முதல்வராக ஆதரவு கொடுத்த காங்கிரஸ் லோக்பால் எனப்படும் ஊழல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற ஆதரவளிக்கவில்லை. முதல்வர் பதவியை வெறும் 49 நாட்களில் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அப்போது அவரது நகர்வு மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது. ஆனால், அது மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கை உருவாக்கியது. தொடர்ந்து 2015-ல் நடைபெற்ற டெல்லி தேர்தலில், அமோக வெற்றியுடன் ஆட்சியமைத்தார் கேஜ்ரிவால். அடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் மீதான அபிமானம் சற்றும் குறையாததால் அவருக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்து மீண்டும் முதல்வராக்கினர் டெல்லி மக்கள்.

கோபால் ராய், சிசோடியாவுடன் கேஜ்ரிவால் – 2017 புகைப்படம்

மக்கள் அபிமானம் மட்டும் இருந்தால்போதும், புதிய கட்சியாக இருந்தாலும் ஆட்சியைக் கைப்பற்றலாம் என தேசம் முழுவதும் அரசியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு நம்பிக்கையைக் கடத்தி தன்னை நிலைநிறுத்திக் கொண்டது ஆம் ஆத்மி. 2017-ல் கேஜ்ரிவால் பற்றி ‘An insignificant Man’ என்றொரு அரசியல் ஆவணப்படம் உருவானது. குறுகிய காலத்தில் இந்திய அரசியல் சமுத்திரத்தின் திமிங்கலத்தின் ஊடே அசுர வளர்ச்சி கண்டார் கேஜ்ரிவால். இவ்வாறாக, டெல்லியில் கடந்த 9 ஆண்டுகளாக ஆத் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. டெல்லியை அடுத்து பஞ்சாப்பிலும் ஆட்சியமைத்துள்ளது.

‘சுழலில் சிக்கவைத்த ஊழல் குற்றச்சாட்டு’ – ஊழலை துடைத்தெறிவோம் என்று துடைப்பத்தை சின்னமாகக் கொண்டு உருவான ஆம் ஆத்மி மதுபான கொள்கை ஊழல் சுழலில் சிக்கியது. மதுபான கொள்கை நடைமுறையில் ஊழல் நடைபெற்றது தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜாமீனில் வெளியில் வந்த கேஜ்ரிவால், தனக்கு பதில் இளம் தலைவர் அதிஷியை முதல்வராக்கினார். டெல்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று குற்றமற்றவர் என்று நிரூபித்த பிறகு முதல்வர் பதவியேற்பேன் என கேஜ்ரிவால் கூறினார்.

இந்நிலையில்தான், கேஜ்ரிவால் கட்சி தொடங்கியதில் இருந்து முக்கியத் தலைவராகவும், போக்குவரத்து அமைச்சராகவும் இருந்த கைலாஷ் கெலாட் ஞாயிற்றுக்கிழமை ஷாக் கொடுத்தார். கைது, சிறைவாசம், கட்சியில் சலசலப்பு, முக்கிய அமைச்சரின் அதிர்ச்சி தரும் ராஜினாமா என அடுத்தடுத்து ஆட்டம் கண்டு வருகிறது அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி.

சிறையிலிருந்த போதே… – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கான சிக்கல்கள். அவர் சிறையில் இருந்தபோதே வரிசைகட்டத் தொடங்கிவிட்டன. கேஜ்ரிவால் சிறையிலிருந்தபோது, அப்போது வந்த ஆகஸ்ட் 15 சுதந்திர நாளில் யார் கொடியேற்றுவது என சலசலப்பு ஏற்பட்டது. அதிஷியை கொடியேற்ற கேஜ்ரிவால் உத்தரவிட, வழக்கம்போல் டெல்லி துணைநிலை ஆளுநர் தலையீடு வந்தது.

துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தலையிட்டு கேஜ்ரிவால் உத்தரவை ரத்து செய்தார். அதிஷிக்கு பதில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் சுதந்திர தின கொடியேற்றுவார் என்று அறிவித்தார். டெல்லி போலீஸ் துறையை உள்துறைதான் கவனிக்கிறது என்பதால் ஆளுநரின் முடிவு நியாயமானதாக கூறப்பட்டது. இது கேஜ்ரிவால் – கைலாஷ் மோதலை வெளிக்கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைலாஷ் வசம் இருந்த முக்கியத் துறைகளைப் பறித்து அதிஷியிடம் ஒப்படைத்தார் கேஜ்ரிவால். இதுவும் கைலாஷ் கெலாட்டுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதையொட்டி ஆம் ஆத்மி உட்கட்சிப் பூசலை சாதகமாக்கிக் கொள்ளி பாஜக காய் நகர்த்துவதாகவும் கருத்துகள் வெளியாகின. அதையெல்லாம் நிரூபிப்பதுபோல், கைலாஷ் ராஜினாமா செய்தவுடனேயே டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா உடனடி ரியாக்‌ஷன் கொடுத்து அரசல்புரசல்களாக இருக்கும் பாஜகவின் முயற்சிகளை உறுதிப்படுத்தினார். ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்த கைலாஷ் மறுநாளே பாஜகவில் இணைந்தார்.

இது ஒருபுறம் இருக்க, 2020 டெல்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) பேருந்து கொள்முதல் ஊழல் தொடர்பான மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை உட்பட ஊழல் மற்றும் தவறான மேலாண்மை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதால் கெலாட் அதற்கு அஞ்சியே கூட பதவியை ராஜினாமா செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு பிரச்சினைக்கு பல்முனைப் பார்வைகள் போல் கெலாட் ராஜினாமா ‘டீகோடிங்’ செய்யப்பட்டு வருகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில் கைலாஷ் கெலாட்டின் விலகல் நிச்சயமாக கேஜ்ரிவால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

அப்போ அந்த ‘பி’ டீம் விமர்சனங்கள்! – இந்து மதத்தின் மீதான பற்று, எதற்கெடுத்தாலும் புராணங்களில் இருந்து மேற்கோள் என்று மிதமான இந்துத்துவ கொள்கையாளராக கேஜ்ரிவால் அறியப்படுகிறார். அதனாலேயே அவர் மீது பாஜக ‘பி’ டீம் விமர்சனங்கள் உண்டு. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மி அங்கு மோசமான திட்டமிடலை மேற்கொண்டது. வெற்றிக்கு வாய்ப்பிருந்தும் பல இடங்களில் பெயருக்கு வேட்பாளர்களை அறிவித்ததும் அது பாஜகவுக்கு வழிவிட்டு களத்தை தவிர்த்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த ஜூலையில் டெல்லியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்தன. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி மவுனம் சாதித்தது. அப்போதும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேஜ்ரிவாலும், ஆம் ஆத்மியும் பாஜகவின் ‘பி’ டீம் என்பது உறுதியாகிவிட்டது என்று விமர்சித்தன.

அசராத அரவிந்த் கேஜ்ரிவால்: வியூகங்களுக்கு மத்தியில் கெலாட் ராஜினாமா பற்றி பேசிய கேஜ்ரிவால், “டெல்லி மேயர் தேர்தல் ஒன்று போதும் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு என்ன காத்திருக்கிறது என்பதை விளக்க” என்று கூறியுள்ளார். “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் குருஷேத்திர போர் போன்றது. பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையேயான போர் போன்றது. கவுரவர்களுக்கு செல்வம் இருக்கலாம் ஆனால் எங்களிடம் கிருஷ்ண பகவான் இருக்கிறார். டெல்லி மேயர் தேர்தலில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம்” என்றும் அவர் கூறியுள்ளார். கைலாஷ் ராஜினாமா செய்த சூழலில் ஆம் ஆத்மியில் பாஜக முன்னாள் எம்எல்ஏ அணில் ஜா இணைந்தார். அந்த நிகழ்ச்சியில்தான் கேஜ்ரிவால் இக்கருத்தை முன்வைத்துள்ளார்.

யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன்

அவருடைய இந்தப் பேச்சு ஒருவேளை கேஜ்ரிவால் இப்போதும் பாஜகவுக்கு சரியான பலப்பரீட்சைக்குத் தயாராகத் தான் இருக்கிறாரோ என்று ஒரு சாராரை முணுமுணுக்க வைத்துள்ளது. யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோர் ஆம் ஆத்மிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது அவர்கள் நீக்கப்பட்டனர். ஆம் ஆத்மியின் முக்கிய முகமாக இருந்தவர்கள் இல்லாமல் போனபின்னர், அது ஆம் ஆத்மி வளர்ச்சிக்கு எவ்வித கடிவாளமும் போடவில்லை. எனவே கெலாட் விலகல், பாஜக வியூகங்கள் நீர்த்தே போகும் என்றும் சிலர் கருதுகின்றன.

இந்தச் சூழலில் அடுத்தடுத்த அடிகளால் ஆம் ஆத்மி கட்சி பலவீனமடைகிறதா? இல்லை, புயலைத் தாங்கி நிற்குமா என்பதில் எப்போதும் போல் மக்கள் மன்றத்தின் தீர்ப்பு மட்டுமே தெளிவை ஏற்படுத்தும். முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது, “மக்கள் எனக்கு மீண்டும் வாக்களித்த பிறகு மீண்டும் முதல்வராவேன்” என்று கேஜ்ரிவாலின் நம்பிக்கைப் பேச்சு நினைவுகூரத்தக்கது. ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.