திருமலை: பல்வேறு முறைகேடுகள் நடப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டதால், தமிழகம், புதுவை உட்பட மேலும் பல்வேறு மாநில சுற்றுலா துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முறையை ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் முதன்முறையாக திங்கள்கிழமை திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நடந்தது. சுமார் 80 அம்சங்கள் குறித்து இதில் 3 மணி நேரம் வரை விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர், இதில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து அறங்காவலர் பிஆர் நாயுடு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: செயற்கை நுண்ணறிவு அதாவது ஏஐ தொழில்நுட்பம் உதவியுடன் சுவாமியை தரிசனம் செய்யும் வரிசையில், பக்தர்கள் அதிக நேரம் இருப்பதை கண்டறிந்து, அவர்களை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்றுமத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கலாமா? அல்லது பணி நீக்கம் செய்யலாமா? அல்லது இவர்களை அரசு துறைகளுக்கு மாற்ற பரிந்துரை செய்யலாமா? என்பது குறித்து தீர்க்ககால விவாதம் நடந்தது. எது எப்படி இருப்பினும் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இனி பணி செய்ய ஒப்புக்கொள்ள முடியாது என்பதால் இது தொடர்பாக முடிவெடுக்க அரசுக்கு பரிந்துரை செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும்.
திருமலையில் உள்ள குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் 3 அல்லது 4 மாதங்களுக்குள் முழுமையாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பதியில் தேவஸ்தான நிதியில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு ’கருட பாலம்’ என பெயர் சூட்டப்படுகிறது. அலிபிரியில் சுற்றுலா கழகம் சார்பில் 20 ஏக்கர் நிலம் கடந்த ஆட்சியில் மும்தாஜ் ஓட்டல் நிறுவனத்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை அறங்காவல் குழு ரத்து செய்கிறது. ஆன்மீக திருத்தலமாக விளங்கும் திருமலையில் அரசியல் பேச தடை விதிக்கப்படுகிறது. தடையையும் மீறி அரசியல் பேசினால் கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை ரத்து செய்யப்படுகிறது. இதன் நிதிகள் கடந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு திசை திருப்பப்பட்டு அவப்பெயர் ஏற்பட்டதால், ஸ்ரீவாணி அறக்கட்டளை பெயர் நீக்கப்படும். ஆனால், இந்த டிக்கெட்டின் பணம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கே வரும்படி இனி வழி வகுக்கப்படும்.
தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள ஏழுமலையானின் பணம், நகைகள் இனி அரசு வங்கிகளில் டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தில் கூடுதலாக ஒரு உணவு வகையை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம், புதுவை, தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட இதர மாநிலங்களின் சுற்றுலா துறைக்கும், ஆந்திர அரசு பஸ் கழகத்திற்கும் (ஏபிஎஸ்ஆர்டிசி) திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இதுவரை ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதால் இவை அனைத்தையும் அறங்காவலர் குழு ரத்து செய்கிறது.
திருமலையில் கோகர்பம் அணை அருகே கடந்த அரசு விசாகப்பட்டினம் சாரதா பீடத்திற்கு இடம் ஒதுக்கியது. அங்கு சாரதா பீடம் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டி வருவதால், மடம் கட்ட அதற்கு வழங்கிய உரிமம் ரத்து செய்யப்படுகிறது. பிரம்மோற்சவத்தில் சிறப்பாக பணியாற்றி தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் 10 சதவீதம் போனஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ,7,535 வழங்கவும் இந்த அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பதியை சொந்த ஊராக கொண்ட உள்ளூர்வாசிகளுக்கு பழையபடி, ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்கிழமையன்று ஆதார் அட்டை மூலம் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் லட்டு பிரசாதத்திற்கு தரமான நெய்யை உபயோகிப்பது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் தெரிவித்தனர். இந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், உயர் தேவஸ்தான அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.