சென்னை: தமிழக அரசின் நிதிப் பகிர்வு பரிந்துரைகளை, மற்ற மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம் என்று 16-வது நிதிக்குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார்.
மத்திய அரசின் 16-வது நிதிக்குழு அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் சென்னை வந்துள்ளது. இந்தக் குழு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றது. அதன்பின், நிதிக்குழு தலைவர் அர்விந்த் பனகாரியா செய்தியாளர்களிடம் கூறியது: “இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் 16-வது நிதிக்குழு தனது பணிகளை தொடங்கி, 12-வது மாநிலமாக தமிழகம் வந்துள்ளது. மேலும் 16 மாநிலங்களின் கருத்துக்களை கேட்க இன்னும் 7 மாதங்கள் பயணிக்க உள்ளோம்.
தமிழக முதல்வர் மாநிலத்தின் வளர்ச்சிக்கான தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். தமிழக அரசு தனது அறிக்கையை சிறப்பாக தயாரித்துள்ளது. முதல் கோரிக்கையாக செங்குத்து மற்றும் கிடைமட்ட பகிர்வு உள்ளது. செங்குத்து வரிப் பகிர்வை பொறுத்தவரை தற்போது நடைமுறையில் மாநிலத்துக்கு 41 சதவீதம், மத்திய அரசுக்கு 59 சதவீதம் என இருப்பதை, மாநிலத்துக்கு 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கையாக உள்ளது. மற்ற மாநிலங்களும் இதே கோரிக்கையை வைக்கின்றன.
வளம்மிக்க மாநிலங்கள், வளமில்லா மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி, 1990-களில் 3-க்கு ஒன்று என்று இருந்த நிலையில், தற்போது 6-க்கு 1 என மாறியுள்ளது. எனவே, வரிப் பகிர்வு என்பது வளமில்லாத மாநிலங்களுக்கு அதிகளவு செல்கிறது. தமிழகம் போன்ற வேகமாக வளரும் மாநிலங்களுக்கு போதிய நிதியை வழங்காவிட்டால் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பது மாநில அரசின் கருத்தாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம் பங்களிப்பை தமிழகம் வழங்குவதால், அதே அளவு நிதிப்பகிர்வை தமிழக அரசு எதிர்பார்க்கிறது. உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரிக்க கோரியுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு நிதிக்குழு முடிவெடுக்கும்.
தனிநபர் வருவாய் வேறுபாட்டை பெயரளவுக்கு கருதக்கூடாது. அது அதிகமாக விலைவாசி உயர்வுடன் தொடர்புடையதாக உள்ளது என தமிழகம் தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரிப் பகிர்வுக்காக தனிநபர் வருமான வரம்பை 45-லிருந்து 35 சதவீதமாக குறைக்க பரிந்துரைத்துள்ளது. மற்ற 16 மாநிலங்களுக்கு சென்று வந்த பின் தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு 60 மற்றும் 40 சதவீதமாக உள்ளது. கூடுதல் நிதிக்கு பரிந்துரைக்க வேண்டும என கோருவது மாநிலங்களின் உரிமை. நாட்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று தனித்துவம் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலமுமே சிறப்பு வாய்ந்ததுதான். ஆனால், 25 விதமான அம்சங்களை செயல்படுத்த முடியாது. மேலும், நிதிப் பகிர்வு உயர்த்துவது குறித்து அனைத்து மாநிலங்களின் கருத்துக்களை கேட்ட பின்னர் முடிவெடுப்போம்.
காலநிலை மாற்றத்தை குறிப்பிட்டு தமிழகம் பேரிடர்களுக்கு முழுமையான நிதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற கோரிக்கைகளை கடலோர மாநிலங்ளும் வைத்துள்ளன. இதனை நிதிக்குழு வரவேற்கிறது. அதே நேரம், பேரிடர் மேலாண்மை நிதிகளுக்கு மாற்று வழிகளும் ஆராயப்படும். பேரிடர் குறியீட்டுக்குள் வராதவற்றுக்கும் நிதி அளிப்பதற்கான பரிந்துரைகள் ஆய்வு செய்யப்படும்” என்றார்.