‘நீா் பிளஸ்’ தரச்சான்று பெற சென்னை மாநகராட்சி விண்ணப்பம்: கழிவுநீர் மேலாண்மை குறித்து கருத்து தெரிவிக்கலாம்

சென்னை: மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ‘நீர் பிளஸ்’ தரச்சான்று பெற சென்னை மாநகராட்சி விண்ணப்பித்துள்ளது. இதற்காக மாநகர கழிவுநீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.

‘தூய்மை இந்தியா 2.0’ திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து நகரங்களிலும் 2026-ம் ஆண்டுக்குள் கழிவுநீா் வசதியை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்வது மற்றும் கழிவுநீரை முழுமையாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு வீடுகள் மற்றும் பொது இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை அகற்றுவதற்கான உள்கட்டமைப்பை சிறப்பாக கையாளும் மாநகருக்கு ‘நீர் பிளஸ்’ (Water +) எனும் தரச்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இத்தரச் சான்றை பெற மாநகராட்சி விண்ணப்பித்துள்ளது. சென்னை மாநகரம் கழிவுநீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் அனைத்து வீட்டு உபயோக நீா் மற்றும் கழிவுநீா் சேகரிக்கப்பட்டு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு சுத்திகரிப்பு நிலையம் மூலம் மறுசுழற்சி செய்து மீண்டும் மாற்றுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த நடைமுறை சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம் மூலம் பின்பற்றப்படுகிறது. அதனால் நீா் பிளஸ் நகரம் எனும் அங்கீகாரத்தை பெற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, பொதுமக்கள் 15 நாட்களுக்குள்ளாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, மாநகர கழிவுநீர் மேலாண்மை குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.