மேட்டூர்: விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை, என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த எம்.காளிப்பட்டியில், மேட்டூர் அணை உபரி நீரைக் கொண்டு 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை கொண்டு கொடுத்ததற்காக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமிக்கு, காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு, அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தின் பாராட்டு விழா நேற்று நடந்தது.
இதில், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு டிராக்டர், ஆடு பரிசாக வழங்கப்பட்டது.
விழாவில் பழனிசாமி பேசியதாவது: இதுநாள்வரை நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தற்போது விவசாயிகள் ஒன்று கூடி நடத்தும் நன்றி பாராட்டு விழாவில் பங்கேற்றது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பாக்கியம். விவசாயிகளின் துயரம் முழுமையாக தெரிந்ததால் 100 ஏரி திட்டத்தை கொண்டு வந்தேன். இத்திட்டத்தில் விடுபட்ட ஏரிகளை மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் நீரேற்று மூலம் நிரப்பப்படும்.
அதிமுக ஆட்சியில் 70 சதவீத பணிகள் முடிவடைந்தது. ஒரு ஆண்டிலேயே முடிக்காமல், அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காக ஆட்சி பொறுப்பேற்று 42 மாதங்களாகியும் திமுக பணியை முடிக்கவில்லை. விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை.
முக்கெம்பு அணையை கட்டியது அதிமுக, திறந்தது திமுக. நாம் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைக்கின்றனர். திமுக திறந்து வைத்த பெரும்பாலான திட்டங்கள் கடந்த ஆட்சியில் அதிமுக கொண்டு வந்தது.
கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்துக்கு திமுக அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
திமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக காட்சி அளித்தன. அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்பட்டன. விவசாயிகளின் நிலங்களை தனியாருக்கு கொடுத்தது திமுக; ஆனால் விவசாயிகளின் நிலங்களை காத்து பாதுகாப்பு கொடுத்தது அதிமுக. விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஏதும் தெரியாது.
‘பழனிசாமி பொறாமையில் பேசுகிறார்’ என உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார். எந்த திட்டமும் கொண்டு வராமல் கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக.
அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பதற்காக என்னைப் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள். பேனா சின்னம் வைக்க மக்கள் வரிப் பணம் ரூ.82 கோடியை கடலில் போடுகிறீர்கள். கட்சி நிதியில் இருந்து செலவு செய்யலாமே.
ஸ்டாலினும், உதயநிதியும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசிக் கொள்கிறார்கள் நேற்று பெய்த மழையில் முளைத்த விஷக்காளான் உதயநிதி; நீங்கள் எனக்கு அறிவுரை கூற வேண்டாம்.
உழைப்பால் உயர்ந்தவன் நான்; உங்களை போல் தந்தையின், தாத்தாவின் அடையாளத்தால் பதவிக்கு வரவில்லை. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை. தொடந்து எங்களை விமர்சனம் செய்தால் தக்க பதிலடி கொடுப்போம். ரெய்டுகளை கண்டு பயப்படுபவன் நான் அல்ல. மடியில் கனமில்லை மனதில் பயமில்லை. எதையும் துணிவோடு எதிர்கொள்ளும் சக்தி அதிமுகவுக்கு உண்டு.
பாஜகவுடன் கூட்டணி வைக்க தான் திமுக முயற்சி செய்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ‘கோ பேக் மோடி’ என சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு வெள்ளைக்குடை வைத்து ‘வெல்கம் மோடி’ என திமுக தான் இரட்டை வேடம் போடுகிறது. பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது திமுக தான். கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க மத்திய அரசின் துணை வேண்டும்.
நாட்டு மக்களின் தேவை அறிந்து குரல் கொடுக்கும் கட்சி அதிமுக. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், எம்எல்ஏ மணி, எம்பி சந்திரசேகரன், காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் தம்பையா, தலைவர் வேலன் மற்றும் விவசாயிகள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.