உர மானியம் குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் என்றும், விவசாயிகளின் வயல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் உர மானியம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யு.பி. ரோஹன ராஜபக்ஷ தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான உர மானியம் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 22 மாவட்டங்களில் உள்ள ஒரு இலட்சத்து ஒன்பதாயிரம் விவசாயிகளுக்கு 1292 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதில், 19,900 விவசாயிகளைக் கொண்ட அம்பாறை மாவட்டத்திற்கு அதிகூடிய தொகையான 291 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
முதற்கட்டமாக 1 ஹெக்டேருக்கு 15,000 ரூபாவும் இரண்டாம் கட்டமாக 10,000 ரூபாவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், வயல் உழுது, நெல் விதைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முடிந்து அறிவிக்கப்பட்டவுடன் முதற்கட்ட மானியம் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பொலன்னறுவை விவசாயிகளுக்கு உர மானியங்கள் உடனடியாக வழங்கப்படும் என்றும், பொய்யான
பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் ஆணையாளர் நாயகம் விவசாயிகளிடம் மேலும் கேட்டுக்கொண்டார்.