கர்நாடகாவில் கடந்த 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்ஸலைட் இயக்க தலைவர் விக்ரம் கவுடா (44) என்கவுன்ட்டரில் சுட்டுகொல்லப்பட்டார்.
கர்நாடகாவில் உடுப்பி, சிக்கமகளூரு, தட்சின கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் நக்ஸலைட் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அவர்களை கட்டுப்படுத்த கடந்த 2003-ம் ஆண்டு கர்நாடக காவல் துறையில் நக்ஸல் ஒழிப்பு படை உருவாக்கப்பட்டது. இந்த பிரிவை சேர்ந்த போலீஸார் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாவட்டங்களில் முகாமிட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டு கேரள போலீஸார் கர்நாடக எல்லையோரத்தில் கங்காதர் (50) என்கிற பி.ஜி. கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அவர் நக்ஸலைட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினராகவும், மேற்கு தொடர்ச்சி மலையின் சிறப்பு மண்டலக் குழு செயலாளராகவும் பதவி வகித்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் நக்ஸலைட் அமைப்பின் தட்சின கன்னட மாவட்ட தலைவர் விக்ரம் கவுடா (44) குறித்த தகவல்கள் கிடைத்தன.
அவரை கர்நாடக நக்ஸல் ஒழிப்பு படை போலீஸார் கடந்த 20 ஆண்டுகளாக தேடி வந்தனர். அவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமங்களில் செயல்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை பற்றி தகவல் தருவோருக்கு கர்நாடகா போலீஸ் ரூ.3 லட்சமும், கேரளா போலீஸ் ரூ. 50 ஆயிரமும் பரிசுத் தொகையை அறிவித்தன.
இந்நிலையில் விக்ரம் கவுடா நேற்று முன் தினம் இரவு தனது குழுவினருடம் மளிகைப் பொருட்களை சேகரிக்க கப்பினெலே கிராமத்துக்கு செல்வதாக நக்ஸல் ஒழிப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் விக்ரம் கவுடா உயிரிழந்தார். அவரோடு இருந்த 3 கூட்டாளிகள் தப்பியோடிவிட்டதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளாக காவல் துறையால் தேடப்பட்டு வந்த நக்ஸலைட் அமைப்பின் தலைவர் விக்ரம் கவுடா போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தப்பி சென்ற கூட்டாளிகளை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது. கொல்லப்பட்ட விக்ரம் கவுடா தலைமறைவாக உள்ள நக்ஸல் ராஜு, லதா ஆகியோரை சந்தித்து பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. நக்ஸலைட்டுகளை கொல்வதை அரசு விரும்பவில்லை. அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசிடம் சரணடைந்தால், மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் பரமேஷ்வரா தெரிவித்தார்.