புதுடெல்லி: தலைநகர் டெல்லி காற்று மாசுபாடு கடுமையாக இருப்பதால் வீட்டில் இருந்தே வேலை, ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகன இயக்கம் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காற்றின் தரக்குறியீடு தொடர்ந்து 450-க்கும் மேல் உள்ளது. இது காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதை காட்டுகிறது. காற்று மாசு கடுமையாக இருப்பதால் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது. பனிப் பொழிவும் அதிகமாக இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் இன்று கூறும்போது, “டெல்லியில் குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட மக்கள் மூச்சுவிட முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். வீட்டில் இருந்தே வேலை, ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகன இயக்கம் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளோம்.
கிராப்-4 திட்டத்தின் கீழ் வாகனங்களுக்கு ஏற்கெனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இதன் தாக்கத்தை ஆராய்ந்து வருகிறோம். இதன் விளைவுகளுக்கு ஏற்ப அடுத்தகட்ட முடிவுகளை எடுப்போம். இந்த மருத்துவ அவசரநிலை காலத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல்: இதனிடையே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று கூடியபோது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எஸ்சிபிஏ) தலைவர் கபில் சிபல் உள்ளிட்ட உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகையில், “டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் காற்றின் தரநிலை அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையிலான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து, தலைமை நீதிபதி கூறுகையில், “காணொலி வாயிலாக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள விரும்பும் நிலையில் முடிந்த வரை அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.