வாஷிங்டன்: கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை அமெரிக்க நீதித்துறை கொடுக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் பலரும் தங்களது ஸ்மார்ட்போன், லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட் என டிஜிட்டல் சாதனங்களில் கூகுள் குரோம் இன்டர்நெட் பிரவுசரை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அந்த பிரவுசரை கூகுள் விற்பனை செய்ய வேண்டிய சூழல் எழுந்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாக Search சந்தையை குரோம் பிரவுசர் மூலம் ஏகபோகமாக்கியது என கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தார் அமெரிக்க நீதிபதி. இந்நிலையில், அந்த நீதிபதியின் மூலமாகவே கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய வேண்டும் என சொல்ல அமெரிக்க நீதித்துறை அறிவுறுத்த உள்ளதாக தெரிகிறது.
இது குறித்து அமெரிக்க நீதித்துறை கருத்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டது. சட்ட சிக்கல்களை எல்லாம் கடந்து இந்த விவகாரத்தில் தீவிரமான நடவடிக்கையை அரசு தரப்பு மேற்கொள்ள முயல்வதாக கூகுள் தரப்பில் லீ-ஆன் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் பயனர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
பெரிய டெக் நிறுவனங்களின் ஏகபோகம் குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் மேற்கொண்டுள்ள கடுமையான நகர்வுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த வழக்கில் பெரிய அளவிலான தாக்கம் ஏதும் வரும் நாட்களில் இருக்காது என்றே எதிர்பார்க்கபடுகிறது. ஏனெனில், அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசு சற்று நிதானமாக முடிவு செய்யும் என தெரிகிறது.