சுனாமி, நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு, எரிமலை வெடிப்பு போன்ற பேரழிவுகளுக்கு பெயர் போன நாடுதான் இந்தோனேசியா. குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் சில விதிகளை அமல்படுத்துகிறது. பெண்கள் வேலை செய்ய தடையில்லை என்ற சட்டம் இருந்தாலும், காபி, டீ கடை நடத்துவது ஆண்களின் வேலையாக பார்க்கப்படுகிறது.
பழமைவாதம் மிகுந்த இந்தோனேசியாவின் இந்த மாகாணத்தில் பெண்களால் நடத்தப்படும் ஒரே கஃபே `மார்னிங் மாமா’ (Morning Mama) ஆகும். 28 வயதான குர்ராதா, `1,001 காபி கடைகளின் நகரம்’ என்று அழைக்கப்படும் பண்டா ஆச்சே நகரில், பெண்களுக்கு வசதியாக ஒரு கடையை உருவாக்குவதற்காக கடந்த ஆண்டு `மார்னிங் மாமா’ (Morning Mama) கஃபேவை திறந்தார். பெண்களுக்கு வசதியான ஒரு கஃபேவை ஏன் திறக்கக்கூடாது என்று நான் நினைத்தேன். அந்த கேள்விதான் தற்போது ஒரு விடையாக மாறியுள்ளது என்றார். ஆச்சேவின் பிரபலமான காபி கடையின் உரிமையாளர் ஹஜ்ஜி நவாவி, பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டோம் என்று கூறியதையும் குர்ராதா சுட்டிக்காட்டினார்.
இந்த மாகாணமானது கொடூரமான சுனாமி தாக்குதலுக்கு ஆளனான ஒரு இடமாகும். இருப்பினும் இங்குள்ள கடைகள் மிகவும் பிரபலமானதாக அறியப்படுகிறது. காபியுடனான ஆச்சேவின் வலுவான தொடர்பு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே டச்சு காலனி ஆட்சியாளர்களுடன் தொடங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆச்சேவில், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டங்கள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆச்சேவில் உள்ள பெண்கள் கல்வி கற்பது, தொழில் தொடங்குவது போன்றவை எட்டாக் கனியாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், குர்ராதா இதை கண்டு அஞ்சவில்லை.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் 200,000 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் பரிதாபமாக பலியாகினர். அதில் குர்ராதாவின் கிராமம் முற்றிலும் அழிந்துபோனது. தனது எட்டு வயதில் குடும்பத்தை இழந்தார் குர்ராதா. அத்தை மற்றும் மாமாவால் வளர்க்கப்பட்ட அவர், சிறுவயதிலேயே துறுதுறுவென இருந்திருக்கிறார். ஓரளவு வளர்ந்த பிறகு அவர், போட்டோகிராபி தொழிலில் ஈடுபட்டுள்ளார். அத்தொழில் தனக்கு நம்பிக்கையையும், சேமிக்கும் பழக்கத்தையும் கற்றுக் கொடுத்ததாக கூறுகிறார். அவரது மாமாவும் அவரை ஊக்குவித்தது, அவருக்கு தொழில் முனைவோராக வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துள்ளது.
இது குறித்து அவர், “தற்சமயத்தில், மற்ற பெண்கள் தொழில் தொடங்க பயப்படுகிறார்கள். பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று இங்குள்ள மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அந்தக் காலம் மாறிவிட்டது என்பதை பழைய தலைமுறையினரும் சற்று புரிந்து கொள்கின்றனர். இருப்பினும் பெண்கள் பயந்துபோய் வீட்டிலேயே முடங்கிவிடக் கூடாது. பெண்கள் தலைவர்களாகவும், படைப்பாளிகளாகவும் உருவாக முடியும்” என்றார். குர்ராதா தனது கடையில் இரண்டு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் வேலை பார்ப்பதாக கூறுகிறாள்.
தனியாக ஓட்டலை நடத்தும் குர்ராதா மனம் திறந்து தனது அனுவத்தையும், பெண்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான ஐடியாவையும் கூறுகிறார். அதில், இந்த இடத்தில், சிகரெட் புகை இல்லை, எந்தவித சத்தமும் இல்லை. இந்த இடமே அமைதியாக உள்ளது. பல ஆண்களும் அமர்ந்து காபி குடிக்கிறார்கள். பெண்கள் சொந்தமாக தொழில் செய்யலாம். சொந்தமாக முடிவெடுக்கலாம் அவர்களுக்கு அனைத்து சுதந்திரமும் உள்ளது என்றார். மேலும், பெண்களுக்கு மாற்றத்திற்கான நேரம் இது. கஃபே வேலைக்கு குறைந்தபட்சம் 1,000 பேர் விண்ணப்பிப்பதை சுட்டிக்காட்டி பெண்கள் முன்னேறி வருவதாக கூறினார். தன்னைப் போல, தொழில் தொடங்க இருப்போரை ஊக்குவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.