திருவேற்காடு – கோலடி ஏரி ஆக்கிரமிப்பு விவகாரம்: தச்சு தொழிலாளி தற்கொலை; பொதுமக்கள் சாலை மறியல்

பூந்தமல்லி: திருவேற்காடு -கோலடி ஏரி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தச்சு தொழிலாளி தற்கொலைக்கு நியாயம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி பகுதியில் உள்ள 169 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோலடி ஏரி, ஆக்கிரமிப்பு காரணமாக 112 ஏக்கராக குறைந்துள்ளது. அவ்வாறு பரப்பளவு குறைந்துள்ள ஏரி பகுதியும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில், கோலடி ஏரியை ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்ற முடிவு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், முதல் கட்டமாக கடந்த மாதம் கோலடி-அன்பு நகர், செந்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரியை ஆக்கிரமித்து புதிதாக கட்டப்பட்டு வந்த வீடுகள் மற்றும் ஆள் இல்லாமல் உள்ள வீடுகள் என, 33 வீடுகளை அதிரடியாக அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோலடி பகுதியில் சாலை மறியல் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, வருவாய்த் துறையினர் மேற்கொண்ட கோலடி ஏரியை ஆக்கிரமித்திருந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணியில், 1,263 வீடுகள் கோலடி ஏரியை ஆக்கிரமித்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார் தலைமையிலான நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் கோலடி ஏரியை ஆக்கிரமித்து கட்டிய 1,263 வீடுகளை 21 நாட்களுக்குள் அகற்ற, ஆக்கிரமிப்பு வீடுகளில் கடந்த 15-ம் தேதி நோட்டீஸ் ஒட்டினர்.

இதனால், கோலடி ஏரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்து வந்த பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் மன உளைச்சலில் இருந்து வந்தவர்களில், தச்சு தொழிலாளியான சங்கர்(44) என்பவரும் அடக்கம். சங்கருக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில், அவர் வீட்டிலும் நீர் வள ஆதாரத் துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளதால், தன் வீட்டை இடித்து விடுவார்கள். ஆகவே தான் தற்கொலை செய்து கொள்வேன் என, ஏற்கனவே குடும்பத்தாரிடம் சங்கர் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நவம்பர் 17-ம் தேதி தன் வீட்டில் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சங்கர் மரணத்துக்கு நியாயம் கேட்டும், கோலடி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை கைவிடக்கோரி கோலடி, திருவேற்காடு-அம்பத்தூர் சாலையில் 400 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தால் திருவேற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.