இம்பால்: மணிப்பூரின் பல மாவட்டங்களில் மீண்டும் வன்முறை வெடிப்பதற்கான சூழல் அதிகரிப்பதால் தார்மிகப் பொறுப்பேற்று மாநில முதல்வர் பைரோன் சிங் பதவி விலக வேண்டும் என்றும், அமைதியை நிலைநாட்ட இந்தப் பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை சரியில்லை. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று வருகிறார், ஆனால் அவர் மணிப்பூருக்குச் செல்லவில்லை. அவர் நாட்டின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். வன்முறை தொடங்கி கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகிறது. ஆனால், ஒருமுறைகூட அவர் மணிப்பூருக்கு வரவில்லை. பிரதமர் மோடியின் நேரடித் தலையீடு மட்டுமே நெருக்கடியைத் தீர்க்க உதவும்” என்று இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.
மணிப்பூரில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய இரோம் ஷர்மிளா, மாநிலத்தின் சில பகுதிகளில் “கடுமையான” அந்த சட்டத்தை மீண்டும் திணிப்பது அமைதியின்மையை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “AFSPA ஒரு தீர்வாக இருக்க முடியாது. இது ஒரு கொடூரமான சட்டம். மணிப்பூரில் இது நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், அது வன்முறையை நிறுத்தவில்லை. வடகிழக்கு, இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மத்திய அரசு வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, நடைமுறையிலும் அங்கீகரிக்க வேண்டும். AFSPA மீண்டும் அமலுக்கு வருவது நிலைமையை மேலும் மோசமாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கிளர்ச்சிக் குழுக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த மணிப்பூரின் ஐந்து மாவட்டங்களில் உள்ள ஆறு காவல் நிலையப் பகுதிகளில் நவம்பர் 14 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் AFSPA-ஐ மீண்டும் அமல்படுத்தியது.
மாநில அரசின் தவறான கொள்கைகளே மாநிலத்தின் தற்போதைய நிலைக்கு காரணம் என்று இரோம் ஷர்மிளா குற்றம் சாட்டினார். “மாநில அரசின் தவறான கொள்கைகள் மணிப்பூரை இந்த வரலாறு காணாத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் அமைதியை மீட்டெடுக்கத் தவறியதற்காக முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும். பாஜக அவரை ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். மணிப்பூர் மக்களிடம் அவர் தோல்வி அடைந்துவிட்டார்” என்று இரோம் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.