மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிர பிரசாரம் செய்ததோடு அனைத்து பத்திரிகைகளிலும் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தினமும் முழுபக்க விளம்பரமும் கொடுத்தது. அதோடு காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறி தனியாகவும் முழுபக்க விளம்பரம் செய்தது. தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பார்வையாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மும்பை அருகில் நாலாசோபாராவில் உள்ள ஹோட்டலில் பா.ஜ.க தேசிய செயலாளர் வினோத் தாவ்டே வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதற்காக ரூபாய் 5 கோடி கொண்டு வந்திருப்பதாக பகுஜன் விகாஸ் அகாடி தலைவர் ஹிதேந்திர தாக்குருக்கு பா.ஜ.க நண்பர்கள் சிலர் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அக்கட்சி தொண்டர்கள் சம்பந்தப்பட்ட ஹோட்டலை சூழ்ந்து கொண்டனர்.
தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகளும், போலீஸாரும் விரைந்து வந்தனர். அவர்கள் வினோத் தாவ்டே தங்கி இருந்த ஹோட்டல் அறையில் சோதனை செய்தனர். இதில் 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வினோத் தாவ்டேயை சூழ்ந்து கொண்டு பணத்தை காட்டி பகுஜன் விகாஸ் அகாடி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். ஹோட்டல் அறையில் பணம் இருந்த கவர்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வினோத் தாவ்டே மீது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வினோத் தாவ்டே வெளியிட்டுள்ள செய்தியில், “தேர்தல் நாளில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று பா.ஜ.க நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கருதினால் அது குறித்து தேர்தல் கமிஷன் விசாரிக்கட்டும்” என்றார்.
முன்னதாக வினோத் தாவ்டே ரூ.5 கோடியை வாக்காளர்களுக்கு சப்ளை செய்வதாக ஹிதேந்திர தாக்குர் குற்றம்சாட்டியதை தொடர்ந்து பா.ஜ.க மற்றும் பகுஜன் விகாஸ் அகாடி தொண்டர்கள் மோதிக்கொண்டனர். வினோத் தாவ்டே அறையை சோதனை செய்தபோது ரூ.15 கோடி பட்டுவாடா செய்யப்பட்டதற்கான டைரி ஒன்று சிக்கி இருப்பதாக ஹிதேந்திர தாக்குர் குற்றம்சாட்டினார்.
இது குறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி வெளியிட்டுள்ள செய்தியில், “ஒன்றும் இல்லாத உத்தவ் தாக்கரே பேக்கை சோதித்தார்கள். ஆனால் பணம் இருந்த பேக்கை சோதிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க தேர்தலில் பண பலத்தை பயன்படுத்த முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டி இருக்கிறது. மகாராஷ்டிரா முழுக்க 800 கோடிக்கும் அதிகமான பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்