“ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டும். ஏனெனில்…” – வங்கதேச தலைமை ஆலோசகர் நேர்காணல்

டாக்கா: இந்தியாவில் இருந்துகொண்டு தனது அரசியல் நடவடிக்கைகளை ஷேக் ஹசீனா தொடர்வதாகவும், விசாரணையை எதிர்கொள்ள டெல்லி அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து ‘தி இந்து’ நாளிழின் தேசிய ஆசிரியர் சுஹாசினி ஹைதருக்கு முகம்மது யூனுஸ் டாக்காவில் அளித்த சிறப்புப் பேட்டி:

வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக 100 நாட்களை நிறைவு செய்துள்ளீர்கள். சட்டம் – ஒழுங்கு மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டு முக்கியப் பிரச்சினைகளில் உங்கள் அரசாங்கத்தை எவ்வாறு தரப்படுத்துவீர்கள்?

“சட்டம் – ஒழுங்கை நாங்கள் இன்னும் மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதனால், எங்களுக்கு இன்னும் ‘ஏ’ தரம் கிடைத்துவிட்டது என்று நான் சொல்லமாட்டேன். அதேநேரத்தில், பொருளாதாரத்தைப் பொருத்தவரை, ஏ-பிளஸ் தரம் கொண்டுள்ளது என கூறுவேன். ஏனெனில், நாங்கள் ஆட்சிக்கு வரும்போது நாடு ஒரு சிதைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. அனைத்து நிதி நிறுவனங்களும் வங்கி அமைப்புகளும் கிட்டத்தட்ட சீர்குலைந்தன.

இது ஒரு மோசமான வங்கி அமைப்பு. மோசமான கடன்கள். கடன்களில் 60% திருப்பிச் செலுத்தவில்லை. இதை எவ்வாறு கையாள்வது, வாடிக்கையாளர்களை எவ்வாறு கையாள்வது என்பதில் பெரிய குழப்பம் இருந்தது. எனவே, எங்களிடம் கிட்டத்தட்ட செயலற்ற நிதி அமைப்புதான் இருந்தது. எனவே அங்கிருந்து, வங்கி அமைப்பை மீண்டும் செயல்படச் செய்தோம். இது இன்னும் சரியாகவில்லை, ஆனால் அவை முன்னேறி வருகின்றன.

நாங்கள் பொறுப்பேற்றவுடன் நமது அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது, ஆனால் இப்போது கடந்த 100 நாட்களாக மாதந்தோறும் வளர்ந்து வருகிறது. எங்களால் எங்களின் கடனை செலுத்த முடிந்தது, அது எங்கள் சர்வதேச இமேஜை மேம்படுத்தியுள்ளது. பணவீக்கத்தை பொறுத்துக்கொள்ளக்கூடிய அளவுக்குக் குறைக்க முயற்சிக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நாங்கள் மிகப் பெரிய அளவிலான உலகளாவிய ஆதரவைப் பெற்றுள்ளோம் – சர்வதேச சமூகம் எங்களுடன் வணிகம் செய்கிறது. நான் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்தபோது, ​​பொதுச் சபைக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உட்பட பல அரசாங்கத் தலைவர்களை சந்தித்தேன். பலர் எங்களுக்கு நிதியுதவியும், அரசியல் ஆதரவையும் அளிப்பதாக உறுதியளித்தனர். வங்கதேசத்தின் அதிகாரத்துவ செயல்பாட்டில் சிக்காமல் இருப்பதற்காக, முதலீட்டாளர்களுக்கான பிரச்சனைகளை விரைவாகத் தீர்க்கத் தயாராக இருக்கும் அதிகாரிகள் எங்களிடம் உள்ளனர். எனவே நாடு மிகவும் சாதகமான வழியில் செல்கிறது என்று நான் கூறுவேன்.

நீங்கள் நிச்சயமாக மிகவும் நேர்மறையான ஒரு சித்திரத்தை வழங்குகிறீர்கள். ஆனால் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா – அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வங்கதேசத்தை விமர்சித்து மிகவும் கடுமையான அறிக்கையை வெளியிட்டவர் அவர். புதிய அமெரிக்க நிர்வாகத்துடன், சர்வதேச ஆதரவு தொடரும் என்பதில் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?

“வங்கதேசம் குறித்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என நினைக்கிறேன்.”

அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக, சிறுபான்மையினரின் நிலை குறித்து அவர்…

“வங்கதசத்தில் சிறுபான்மையினரின் நிலை பற்றி அவர் சரியாக அறிந்திருக்கவில்லை. இது உலகம் முழுவதும் நடக்கும் பிரச்சாரம். ஆனால், வங்கதேசத்தின் உண்மை நிலையை அவர் அறியும்போது அவர் நிச்சயம் ஆச்சரியப்படுவார். அமெரிக்காவில் ஒரு புதிய அதிபர் வருவதால் எல்லாம் மாறும் என்று நான் நினைக்கவில்லை. அதிபர் மாற்றத்தால் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் நாட்டிற்கு இடையிலான உறவுகள் பொதுவாக மாறாது.

அமெரிக்காவில் ட்ரம்ப் 2.0 என்றால், இப்போது வங்கதேசத்தில் 2.0 உள்ளது என்பதை நினைவில் கொள்வோம். இதை நாங்கள் புதிய வங்காளதேசம் என்று அழைக்கிறோம். எனவே நாங்கள் காத்திருப்போம். அமெரிக்க பிரதிநிதிகள் வந்து எங்களுடன் ஆலோசிப்பார்கள். எங்கள் பொருளாதாரம் நன்றாக இருந்தால், அவர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். வங்கதசத்தின் மிகப் பெரிய இறக்குமதி நாடு அமெரிக்கா. எங்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கட்டியெழுப்பிய ஒரு நல்ல உறவு. அது வலுப்பெறும் என்பது எமது நம்பிக்கை.”

டொனால்ட் ட்ரம்ப் கூறியதை நீங்கள் பிரச்சாரம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் மட்டுமல்ல, இந்திய அரசும், வங்கதேசத்தில் இந்துக்கள் குறிவைக்கப்படுவது, வீடுகள் எரிக்கப்படுவது, கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் பற்றி கவலை தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டது. அதற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?

“பிரதமர் மோடியுடனான எனது முதல் தொலைபேசி அழைப்பில் [ஆகஸ்ட் 16ஆம் தேதி], வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று சொன்னார். அது பிரச்சாரம் என்று நான் அவரிடம் மிகத் தெளிவாகச் சொன்னேன். பல நிருபர்கள் இங்கு வந்த பிறகு, சில பதற்றங்கள் பற்றி செய்திகள் வந்தன. ஊடகங்களில் கட்டமைக்கப்பட்ட விதம் அப்படி.”

அதன் பின்னணியில் யார் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

“எனக்குத் தெரியாது, ஆனால் இந்தப் பிரச்சாரம் யதார்த்தமானது அல்ல. மிகத் தீவிரமான மக்கள் குழு ஒவவொரு வழக்குகள் குறித்தும் ஆராய்கிறது.”

நான் சிறுபான்மை சமூகத்தினரிடம் பேசினேன். அவர்கள் பயமாக உணர்கிறார்கள். தாங்கள் குறிவைக்கப்படுவதாக அவர்கள் உணர்கிறார்கள். ஃபேஸ்புக், சமூக வலைதளங்களில் வங்கதேசம் முஸ்லிம் நாடாக மாறும் என்று வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. மதச்சார்பின்மையை அகற்றுவதற்காக அரசியல் சட்டத்தை மாற்றுவது பற்றி இப்போது அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் பேசுவதை நாம் கேள்விப்படுகிறோம். கடந்த 16 ஆண்டுகளில் வங்கதேசத்தில் நாங்கள் பார்த்ததை விட, உங்கள் சொந்த அரசாங்கத்தின் மூலம் இஸ்லாத்தின் தீவிர வடிவம் வெளிப்படும் என்ற உணர்வு உள்ளது. இந்த சமூகங்களுக்கு உறுதியளிக்க உங்கள் அரசாங்கம் ஏதாவது செய்யுமா?

“இப்படி ஒரு பிம்பம் எனக்கு பொருந்துமா? அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் அல்லது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அல்லது பாலின ஆர்வலர்கள் அல்லது பிற ஆர்வலர்கள். எனவே இவர்கள் அனைவரும் செயற்பாட்டாளர்கள். நீங்கள் சொன்ன வார்த்தைகளை அவர்கள் முன் சொன்னால், அவர்கள் உங்களைப் பார்த்து கத்துவார்கள். அமைச்சரவையின் ஒவ்வொரு உறுப்பினர்களின் வாழ்க்கையையும் பார்க்கவும்.”

எனவே உங்கள் அமைச்சரவையில் யாரும் இஸ்லாமிய மயமாக்கலுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டார்கள் என்று சொல்கிறீர்கள்.

“ஒவ்வொருவரின் வாழ்க்கை குறித்றும் பாருங்கள். இவர்கள் மிகவும் அர்ப்பணிப்பு உள்ளவர்கள். பெண் ஆர்வலர்கள் உள்ளனர்.”

மனித உரிமைகள் குழு அதிகாரத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, அரசியல் வன்முறையில் 841 பேர் காயமடைந்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் நீதிக்கு புறம்பான கொலைகளில் 8 பேர் இறந்தனர். பல பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம்… உங்கள் அரசாங்கம் கடந்த கால நடத்தையைத் தொடர்கிறது என்று சிலர் கூறுகிறார்கள்.

“மக்கள் தீர்ப்பளிக்கட்டும், இந்த அரசு செய்ததையும், மற்ற அரசு செய்ததையும் ஒப்பிட்டுப் பார்க்கட்டும். நான் விவாதம் செய்யப் போவதில்லை. பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்துள்ளோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அங்கீகாரச் சட்டம் எங்களால் உருவாக்கப்படவில்லை. நாங்கள் அதைப் பயன்படுத்தினோம், இது சரியான பயன்பாடா என்பதை நீங்கள் விவாதிக்கலாம். அந்த சட்டத்தை மாற்ற விரும்புகிறேன். அது வேறுவிதமான ஆட்சிக்கு சொந்தமான சட்டம்.”

மற்றொரு கவலை என்னவெனில், கடந்த அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் அரசியல் பழிவாங்கலுக்கு இலக்காகிறார்கள். அது நடக்காமல் இருக்க என்ன வழிமுறை உள்ளது?

“சட்டத்தின் ஆட்சி அமையட்டும் என்று நான் கூறுவேன். அதுதான்.”

சீர்திருத்தத்துக்காக எத்தனையோ ஆணையங்களை அமைத்திருக்கிறீர்கள் – சிறுபான்மையினர் உரிமைகள் ஆணையத்தை ஏன் அமைக்கக் கூடாது?

“எங்களிடம் மனித உரிமைகள் ஆணையம் உள்ளது. சிறுபான்மையினரை ஏன் தனித்தனியாக பிரிக்க வேண்டும்? நான் [சிறுபான்மை குழுக்களிடம்], நீங்கள் நாட்டின் குடிமகன் என்று கூறினேன். அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் உங்களுக்கு உள்ளன. நாம் அனைவரும் மனித உரிமைகள் நிறுவப்பட வேண்டும் என்றும், அரசியலமைப்பு நமக்கு வழங்கும் அனைத்து உரிமைகளையும் விரும்புகிறோம். எங்கள் அரசியலமைப்பு ஆணையத்தில் யார் என்று பாருங்கள் (அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் அலி ரியாஸ்). இது அனைத்தும் பிரச்சாரம்.”

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இது நம்பப்படுகிறது என்றால், அது ஒரு அண்டை நாடு. ஆனால், அமெரிக்காவும் நம்புகிறது என்றால், உங்கள் அரசாங்கத்தின் பிரச்சாரம் மக்களை நம்ப வைக்க தவறிவிட்டதா?

“உலகை நம்பவைப்பதற்கான செல்வாக்கு அல்லது பண பலம் எங்களிடம் இல்லாமல் இருக்கலாம்.”

பிரதமர் நரேந்திர மோடியுடன் நீங்கள் தொலைபேசியில் பேசினாலும் இதுவரை நீங்கள் அவரை சந்திக்கவில்லை.

“ஆம். அது இதுவரை நடக்காத ஒன்று. நான் ஐ.நா. பொதுச் சபைக்கு வந்தபோது, மோடி சென்றுவிட்டார். ஆனால் நாங்கள் சந்திக்கப் போவதில்லை என்று இதற்கு அர்த்தமல்ல. நாம் அண்டை நாடுகள் மட்டுமல்ல, வரலாறு நம்மை ஒன்றிணைத்துள்ளது. புவியியல் நம்மை ஒன்றிணைத்தது. மொழி உறவுகள் எங்களை ஒன்றிணைத்துள்ளன. கலாச்சார இணைப்புகள் நம்மை ஒன்று சேர்க்கின்றன.

சார்க் அமைப்புக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முன்மொழிந்துள்ளேன். அது ஏன் இறந்த உடலாக இருக்க வேண்டும்? அனைத்து சார்க் தலைவர்களும் நியூயார்க்கில் சந்திக்கலாம், நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்ற செய்தியை ஐந்து நிமிடங்களுக்குள் அனுப்பலாம் என்று நான் பரிந்துரைத்தேன்.”

இந்தியாவும் வங்கதேசமும் இப்போது BIMSTEC, BBIN ஆகியவற்றில் உள்ளன. ஏன் சார்க்?.

“ஏன் சார்க் கூடாது. நம்மால் எவ்வளவு நண்பர்களையும் உறவுகளையும் உருவாக்க முடியுமோ அவ்வளவு சிறந்தது.”

ஆனால், சார்க்கில் பாகிஸ்தான் உள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகள் உள்ளன.

“சார்க் தொடர வேண்டும். இரு நாடுகளுக்கிடையேயான உறவின் காரணமாக ஒட்டுமொத்த அமைப்பும் மறைந்துவிடக் கூடாது. நாங்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றலாம், இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினைகளை நிகழ்ச்சி நிரலில் இருந்து தற்காலிகமாக நீக்கலாம். ஆனால் சார்க்கை முடிவுக்கு கொண்டு வர முடியாது. இரு உறுப்பு நாடுகளுக்கு இடையேயான உறவின் காரணமாக மற்ற தெற்காசிய நாடுகள் அனைத்தும் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?”

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 5 நிகழ்வுகளால் அது எவ்வாறு பாதிக்கப்பட்டது? அடியாக இருந்ததா?

“அது ஏன் அவ்வாறு இருக்க வேண்டும்? மக்கள் அவதிப்பட்டு, பலர் கொல்லப்பட்டனர், பலர் காணாமல் போனார்கள், பல நிறுவனங்கள் அழிக்கப்பட்டன. அப்படிப்பட்ட ஒரு ஆட்சியிலிருந்து வங்கதேசம் விடுவிக்கப்பட்டதை இந்தியா நட்பு நாடாகக் கொண்டாட வேண்டும். இது பல நாடுகளைப் போல நமது இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும்.”

ஆகஸ்ட் 5 முதல் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பது இருதரப்பு உறவுகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளீர்கள்…

“[முன்னாள் பிரதமர் ஹசீனா] இந்தியாவில் வசிப்பது, குறைந்தபட்சம் இப்போதைக்கு ஒரு பிரச்சினையே இல்லை. அவர் வங்கதேசத்துடன் பேசுவதே பிரச்சனை. அவர் வங்கதேச மக்களுடன் பேசுகிறார். அது அரசியல். அவர் தனது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்கிறார், அதுதான் பிரச்சினை.”

எந்த வகையில்?

“டாக்காவிலும், நாட்டின் பிற நகரங்களிலும் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய ஆடியோ பரப்பப்படுகிறது. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் படத்தை கைகளில் வைத்துக்கொண்டு போராடுமாறு தெரிவித்துள்ளார். அவர்களை போலீஸ் தடுத்தால், வங்கதேச அரசு அமெரிக்காவுக்கு எதிரானது என்று கூறுவார்கள். இது மற்றொரு நாட்டின் உள் மற்றும் வெளி விவகாரங்களில் தலையிடுவதைப் போன்றது.”

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு திரும்ப அழைத்து வருமாறு உங்கள் அரசாங்கம் இன்டர்போலிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஏன் நேரடியாக இந்தியாவிடம் கோரவில்லை? அழைப்பதற்கு இருதரப்பு வழிமுறைகள் உள்ளன.

“ஷேக் ஹசீனாவை அழைத்து வர அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்.”

ஆனால், உங்கள் அரசாங்கம் உண்மையில் ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் கேட்கவில்லை. இத்தனைக்கும் நாடு கடத்தல் ஒப்பந்தம் உள்ளது.

“அதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். ஆனால் நாங்கள் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை.”

உங்கள் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

“இந்தியா ஒப்பந்தத்தை மீறும் என்கிறீர்களா? அவ்வாறு நடந்தால் அது இரு நாடுகளுக்கு இடையே மிகவும் மகிழ்ச்சியான உறவை ஏற்படுத்தாது. நமது இடைக்கால அரசு மிகக் குறுகிய காலமே இருப்பதால், வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள அனைத்தையும் தீர்த்து வைக்க முடியாமல் போகலாம். ஆனால், நமக்குப் பின் வரும் எந்த அரசும் இதை மன்னிக்காது.”

மற்ற விஷயங்களில் இந்தியா – வங்கதேச உறவுகள் சுமுகமாக நகர்வதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? சமீபத்தில் எரிசக்தி இணைப்பு, வர்த்தக இணைப்பு போன்றவற்றில் சில முயற்சிகளைக் கண்டோம்.

“எங்கள் கனவு ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஓர் உறவை கற்பனை செய்கிறது. நாம் செல்ல விரும்பும் திசை அது. நீங்கள் குறிப்பிட்டது நல்ல அறிகுறிகளாகவும், நாங்கள் செல்ல விரும்பும் திசையாகவும் இருக்கும், ஆனால் நாம் அடைய விரும்புவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது, இது மிக நெருக்கமான உறவுகளின் ஒன்றியம். நாம் ஒன்றாக இருக்க பிறந்தவர்கள். நாம் இரட்டையர்கள்.”

உங்கள் அரசாங்கம் எவ்வளவு காலம் இருக்கும்? நீங்கள் எப்போது தேர்தலை எதிர்பார்க்கிறீர்கள்?

“எங்களிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டதும், தேர்தல் நடத்தி, கையளிக்கும் ஒரு காபந்து அரசாங்கமாக நாங்கள் இருக்க மாட்டோம் என்று எங்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. வங்கதேசத்துகான சீர்திருத்தம், 2.0, எங்கள் முக்கிய பொறுப்பு என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் நீண்ட காலம் இருக்க விரும்பவில்லை. எனவே நாங்கள் இந்த சூத்திரத்தை கொண்டு வந்தோம். தேர்தல் செயல்முறை ஒரு தனி செயல்முறையாக முதல் நாளிலிருந்தே தொடங்கியது. மற்ற சீர்திருத்த செயல்முறைகள் இணையாக நகரும்.

இப்போது, ​​முதலில், நாங்கள் தேர்தல் ஆணையத்தை உருவாக்கியுள்ளோம். இது ஒரு நீண்ட, வரையப்பட்ட செயல்முறையாகும். மேலும் தேர்தலை நடத்துவதற்கான சுதந்திரமான அமைப்பை உருவாக்கும் தலைமை தேர்தல் ஆணையர்களை வரும் வாரங்களில் அறிவிப்போம் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் வேறு சில சீர்திருத்தங்கள் நடக்கும் வரை அவர்களால் தேர்தலை நடத்த முடியாது.

அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான ஆணையம் நமக்கு இருசபை நாடாளுமன்றம் வேண்டுமா, விகிதாசார பிரதிநிதித்துவம் உள்பட பலவற்றை தீர்மானிக்க வேண்டும். தேர்தலுக்கான ரயில், நிலையத்தை விட்டு வெளியேறியது என்று நான் கூறுவேன்.”

இதற்கு சில வருடங்கள் ஆகுமா?

“எனக்கு எதுவும் தெரியாது. மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பார்க்க விரும்புகிறார்கள். எனவே கூடிய விரைவில் ஒருமித்த கருத்தை உருவாக்க நாங்கள் பாடுபடுவோம்.”

அவாமி லீக் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுமா?

“இது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அரசியல் கட்சி குறித்து நாங்கள் முடிவு எடுக்க விரும்பவில்லை, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பிஎன்பி (வங்காளதேச தேசியவாத கட்சி) கூறியுள்ளது. எனவே அவர்கள் ஏற்கனவே தீர்ப்பை வழங்கியுள்ளனர். நாட்டின் ஒரு பெரிய கட்சியின் கருத்தை நாங்கள் மீற முடியாது.”

எனவே அவாமி லீக் போட்டியிடுவதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையா?

“நான் ஒரு கட்சியையோ அல்லது வேறு கட்சியையோ தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதி அல்ல. அரசியல்வாதிகளின் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறேன்.”

பல ஆண்டுகளுக்கு முன்பு (2007-இல்) சொந்தக் கட்சி தொடங்க முயற்சித்தீர்கள்…

“அது வெறும் 10 வாரங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. மக்களுக்கு மாற்றம் வேண்டும் என்று பலர் எனக்கு அழுத்தம் கொடுத்தனர். நாங்கள் கட்சிக்கு பெயர்கூட வைத்தோம்.”

உங்களை அரசியல்வாதியாக பார்க்கவில்லையா?

“நான் என்னை ஓர் அரசியல்வாதியாக பார்க்கவில்லை.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.