Ukraine War: `உணவுப்பொருள்களை சேமித்து வையுங்கள்' – குடிமக்களை போருக்கு தயாராக்கும் ஐரோப்பிய நாடுகள்

உக்ரைன் மீதான படையெடுப்புத் தொடங்கி 1000 நாள்கள் கடந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவு ரஷ்யா அணு ஆயுத போருக்கான எச்சரிக்கையை எழுப்பியிருக்கிறது. உக்ரைன் அமெரிக்காவின் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகனைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவில் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல்விடுத்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத போருக்கான தயாரிப்புகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் ரஷ்யாவுக்கு உள்ளே தாக்குதல் நடத்த அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்தது ரஷ்யாவை ஆத்திரமூட்டியுள்ளது.

உக்ரைன், ரஷ்யாவின் ப்ரையன்ஸ்க் பகுதியில் அமெரிக்காவில் தயாரான ATACMS ஏவுகணைகள் ஆறினை ஏவியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ATACMS 300 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்கையும் தாக்கி அழிக்க வல்லது.

சர்வதேச விதிகளின்படி, அணுசக்தி உள்ள ஒரு நாடு அணுசக்தி இல்லாத நாட்டுடன் மோதும்போது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது. இதனால், அமெரிக்க ஆயுதங்கள் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தினால் ரஷ்யா அணுசக்தி ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்காது எனக் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் இந்த நிலைப்பாடு ஐரோப்பிய நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சில நாடுகள் போர் ஏற்படும்பட்சத்தில் மக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கின்றன.

ஸ்வீடன் அதன் மக்களுக்கு ஷெல்டர்கள் குறித்த துண்டு பிரசுரத்தை அளித்துள்ளதாக மிரர் யுகே தளம் கூறியுள்ளது. மேலும், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட் மற்றும் முட்டை மற்றும் போலோக்னீஸ் சாஸ், ப்ளூபெர்ரி, ரோஷிப் சூப் ஆகியவற்றை சேமித்து வைக்க அறிவுறுத்தியிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 5 முறை மட்டுமே இது போன்ற துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நார்வேயும் அதன் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளது. முழுமையான போர் நடைபெறும்பட்சத்தில் ஒருவாரம் சமாளிக்க தேவையானப் பொருள்களை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல நேட்டோ நாடுகள் தங்களது மக்களை போருக்கு தயாராக இருக்க அறிவுறுத்தியுள்ளன.

டென்மார்க் அணு ஆயுத தாக்குதல் அல்லது போர் எழும்பட்சத்தில் அதன் குடிமக்கள் உலர் ரேஷன் உணவுப் பொருள்கள், தண்ணீர் மற்றும் மருந்துகளை சேமித்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது.

பின்லாந்தும் ஆன்லைனில் “நெருக்கடிகளுக்கு தயாராகுதல்” என்ற குறிப்பை வெளியிட்டு மக்களை எச்சரித்துள்ளது. பின்லாந்தில் வெப்பநிலை மிகவும் குறைந்துவரும் சூழலில் மக்கள் தங்களைக் காத்துக்கொள்வது சவாலானதாக இருக்கும். அயோடின் மாத்திரைகள், எளிமையாக சமைக்கும் உணவுகள், செல்லப்பிராணிகளுக்கான உணவுகள், மின்சாரத்துக்கான மாற்று ஏற்பாடுகள் ஆகியவற்றை தயார்படுத்தி வைக்க அறிவுறுத்தியுள்ளனர்.

பின்லாந்தும் ஸ்வீடனும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகு, கடந்த ஆண்டில் நேட்டோவில் இணைந்த நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. நேட்டோ நாடுகள் மூன்றாம் உலகப்போர் அல்லது அணு ஆயுதப்போர் ஏற்படும் அச்சத்தில் உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.