அடுத்தாண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெறவிருக்கிறது. இதற்கான, 574 வீரர்கள் அடங்கிய ஏலப் பட்டியலைக் கடந்த வெள்ளிக் கிழமையன்று பி.சி.சி.ஐ வெளியிட்டது. இதில், ஐ.பி.எல் வரலாற்றிலேயே முதன்முறையாக 13 வயது இளம் வீரரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. வைபவ் சூர்யவன்ஷி என்றறியப்படும் இடதுகை பேட்ஸ்மேனான இவர், ஏலப் பட்டியலில் ரூ. 30 லட்சம் ஆரம்பத் தொகைக்கு 491-வது வீரராகப் பட்டியலிடப்பட்டிருக்கிறார்.

பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, 2011 மார்ச் 27-ல் பீகாரின் தாஜ்புர் கிராமத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே இவரின் கிரிக்கெட் ஆர்வத்தைக் கண்ட தந்தை சஞ்சய், தனது வீட்டுக்குப் பின்புறத்திலேயே வைபவ் கிரிக்கெட் விளையாடுவதற்குச் சிறியளவில் இடத்தைத் தயார் செய்தார். அதைத்தொடர்ந்து, வைபவுக்கு ஒன்பது வயது ஆனதும், அருகிலுள்ள சமஸ்திபூர் நகரில் கிரிக்கெட் அகாடமியில் சேர்த்துவிட்டார் சஞ்சய். அங்கு இரண்டு ஆண்டுகள் முன்னாள் ரஞ்சி வீரர் மணீஷ் ஓஜாவிடம் பயிற்சி பெற்ற பிறகு, 16 வயதுக்குப்பட்டோருக்கு நடத்தப்படும் விஜய் மெர்ச்சண்ட் ட்ராபிக்கு வைபவ் பயிற்சியளிக்கப்பட்டார்.
தனது 12 வயதில் வினு மங்கட் டிராபி தொடரில் பீகாருக்காகக் களமிறங்கிய வைபவ், ஐந்து போட்டிகளில் 400 ரன்கள் அடித்து அசத்தினார். தொடர்ந்து, 2023 நவம்பரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) இந்தியா A, இந்தியா B, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் மோதும் தொடரில், இந்தியா B அணியில் வைபவ் இடம்பெற்றார். 2024 ICC U19 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வைபவ் 41 ரன்கள் அடித்தார். ஆனால், வங்கதேசம் மற்றும் இந்தியா A அணிகளுக்கெதிரான ஆட்டத்தில் 0, 8 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பினார். வைபவின் இந்த ரன்கள், ICC U19 உலக கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கு போதுமானதாக அமையவில்லை.

பின்னர், ரஞ்சி டிராபியில் தனது சொந்த மாநிலத்துக்கு ஆடும் முயற்சியில் ஈடுபட்ட வைபவ், 23 வயதுக்குட்பட்டோருக்கான தேர்வு முகாமில் பீகார் தேர்வாளர்களைக் கவர்ந்தார். இந்தாண்டு ஜனவரியில், ரஞ்சி தொடரில் எலைட் குரூப் B-ல், பீகார் சார்பில் மும்பை அணிக்கெதிராகக் களமிறங்கி தனது முதல் தர கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார் வைபவ். அப்போது, 12 வருடங்கள் 284 நாள்கள் வயதில் இருந்த வைபவ், 1986-க்குப் பிறகு ரஞ்சி டிராபியில் அறிமுகமான மிக இளம் வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். ரஞ்சியில் மொத்தமாக 5 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் வைபவ், 100 ரன்களை எடுத்திருக்கிறார். இதில், மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 41 அடித்ததே இப்போதைக்கு ரஞ்சியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், பந்து வீசும் திறனும் உடைய வைபவ் ரஞ்சியில் இரண்டு ஆட்டங்களில் பந்துவீசி ஒரு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்.
இதற்கிடையில், கடந்த செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற இந்தியா U19 vs ஆஸ்திரேலியா U19 இளையோர் டெஸ்ட் போட்டியில், 58 பந்துகளில் சதமடித்து அசத்தினார் வைபவ். இந்த ஆட்டத்தில், 14 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசியிருந்தார். இதன்மூலம், இளையோர் டெஸ்டில் இந்திய வீரரின் அதிவேக சதத்தைப் பதிவுசெய்தார் வைபவ். மேலும், ஒட்டுமொத்தமாக இது இரண்டாவது அதிவேக சதம்.
Watch vaibhav suryavanshi’s quick fire 82 runs against Australia u19.
For whole highlights check bcci official website #KLRahul,#ViratKohli @varun pic.twitter.com/0oSnOAtpZZ— Mahesh Patil 1717 (@1717Mahesh) September 30, 2024
இதற்கு முன், 2005-ல் இலங்கைக்கு எதிரான இளையோர் டெஸ்ட்டில் அதிவேகமாக 56 பந்துகளில் மொயின் அலி சதம் அடித்திருந்தார். அடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நவம்பர் 29-ம் தேதி தொடங்கவிருக்கும் U19 ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணியிலும் வைபவ் இடம்பெற்றிருக்கிறார்.

13 வயதிலேயே இவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வைபவ், ஐ.பி.எல் ஏதேனும் ஒரு அணியால் வாங்கப்பட்டால், ஐ.பி.எல் வரலாற்றில் மிக இளம் வயதில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சிறப்பைப் பெறுவார். அதற்கேற்றாற்போல சில அணிகள் வைபவை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டிவருவதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு, ஏலம் எடுக்கப்பட்டு பிளேயிங் லெவனில் இடம்பெற்று களமிறங்கினால், 13 வயதில் ஐ.பி.எல்லில் களமிறங்கிய முதல் வீரர் என்ற சிறப்பையும் வைபவ் அடைவார். ஐ.பி.எல்லில் இந்த அரிய சாதனை நிகழுமா என்பதைக் காண அடுத்த வார ஐ.பி.எல் ஏலம் வரை காத்திருப்போம்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal
