தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்கள் ரூ.118 கோடிக்கு விற்பனை: அதிகாரிகள்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, நெய், இனிப்பு வகைகள் உள்பட ஆவின் பொருட்கள் ரூ.118 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினசரி 34 லட்சம் லிட்டர் மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பால் பதப்படுத்தப்பட்டு பலவகைகளில் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, பால் உப பொருள்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருள்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரிக்கப்பட்டு ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஆவின் நெய், இனிப்பு வகைள் உள்பட பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, தீபாவளி பண்டிகை இனிப்பு வகைகளான நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜூபிஸ்தா ரோல், காஜூ கட்லி, மோதி பாக் ஆகியவையும், ஆவின் மிக்சர், பட்டர் முருக்கு போன்ற காரவகைகளும், நெய் உள்பட பால் பொருட்களும் விறுவிறுப்பாக விற்பனையாகின.

தீபாவளி பண்டிகையையொட்டி, நெய் மற்றும் இனிப்பு வகைகள் உள்பட ஆவின் பொருட்கள் விற்பனை வாயிலாக ஆவினுக்கு ரூ.118.70 கோடி கிடைத்துள்ளது. இது குறித்து தெரிவித்த ஆவின் நிறுவன அதிகாரிகள், “இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.120 கோடி மதிப்பிலான ஆவின் இனிப்பு வகைகள் உள்பட ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, பல்க் புக்கிங் செய்ய ஊக்கப்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்கு கிடைத்தது. இதன்மூலமாக, இலக்கை எட்டியுள்ளோம். தீபாவளி பண்டிகையையொட்டி, நெய், இனிப்பு வகைகள் உள்பட ஆவின் பொருட்கள் ரூ.118.70 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. நெய்யை பொருத்தவரை 900 டன்னும், இனிப்பு வகைகள் 510 டன்னும் விற்பனையாகி உள்ளன” என்று கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.