"நங்கூரமா இறங்குற சம்பளத்துலதான் என் மகளுக்கு அதை பண்ண முடிஞ்சது" – நெகிழும் 'கானா' பாலா

‘டீசல்’ படத்தின் ‘நங்கூரமா இறங்குற’ என்கிற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நங்கூரமாய் இறங்கி, ட்ரெண்டிங் கடலில் நீந்திக்கொண்டிருக்கிறார் பாடகர் ‘கானா’ குணா.

இவரின் குரலில் ‘டசக்கு டசக்கு…’, ‘சங்கி மங்கி சங்கி மங்கிதான்…’ என ஏற்கெனவே பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் எல்லாவற்றையும் ஓவர்டேக் செய்து ஓவர் வைப் ஏற்றிக்கொண்டிருக்கிறது டீசல் படத்தின் ‘பீர்’ பாடல். உற்சாகத் துள்ளலுடன் இருக்கும் ‘கானா’ குணாவிடம் பேசினேன்.

“இந்தப் பாட்டு இந்தளவுக்குக் கொண்டாடப்படுறதுக்கு இசைமைப்பாளர் திபு நினன் தாமஸ், பாடலாசிரியர் ரோகேஷும்தான் காரணம். ரோகேஷ் என்னோட நல்ல நண்பன். இன்னைக்கு நான் பாடகாரா எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கேன்னா அதுக்கு ரோகேஷ்தான் காரணம். அவன் என்னை மட்டுமில்ல, என்னை மாதிரி கானா பாடகர்களை முன்னேற்றி விட்டு அழகு பார்க்குறான். இந்த வாய்ப்பும் அவனாலதான் கிடைச்சது. முழு நன்றியும் என் நண்பன் ரோகேஷுக்கு தெரிவிச்சுக்கிறேன்.

டீசல் – ஹரிஷ் கல்யாண்

இந்தப் பாட்டை திபு நினன் தாமஸ் சார் ரொம்ப அழகா சொல்லிக்கொடுத்தார். அதனாலதான், ஈஸியா பாட முடிஞ்சது. இன்னும் சொல்லப்போனா பத்தே நிமிஷத்துல பாடி முடிச்சுட்டேன். ஹரிஷ் கல்யாண் சாரும் ‘சூப்பர்ப்பா தம்பி ரொம்ப நல்லா பாடியிருக்கீங்க’ன்னு பாராட்டினாங்க.

நடிகை அதுல்யா ரவி இந்த பாட்டாலதான் என் லைஃபே இருக்குன்னு தேங்க்ஸ் சொன்னாங்க. ‘எனக்கு நன்றி சொல்லாதீங்க, இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும்தான் ஒட்டுமொத்த பாராட்டுகளும் நன்றிகளும் போய் சேரும்’னு சொன்னேன். ஃபேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸுன்னு எல்லா இடத்திலுமே வைரலாகி பாராட்டுகளைக் குவிச்சிக்கிட்டிருக்கு.

பீர் பாட்டுல வர்ற மாதிரியே, பாட்டு பாடும்போது என் மனைவி கர்ப்பமா இருந்தா. பாட்டெல்லாம் பாடி முடிச்சதும், ‘சொர்க்கவாசல்’ படத்துல செல்வராகவன் சாரோட நானும் நடிக்கிறேன் அந்த ஷூட்டிங்காக கர்நாடகாவுல இருந்தேன். அப்போ, இந்தப் பாட்டை ரீல்ஸ் பண்ணினாங்க. அப்போதான், என்னோட முதல் பொண்ணு யுவன்யா பிறந்தா. எனக்கு டபுள் சந்தோஷம்” என்று உற்சாக துள்ளலுடன் பேசியவரிடம், “கானா பாடல் பாடுவதில் எப்படி ஆர்வம் வந்தது?” உங்க குடும்ப பின்னணி என்ன?” என்று கேட்டபோது,

‘கானா’ குணா

“நான், பிறந்தது வளர்ந்தது எல்லாமே வியாசர்பாடிதான். அப்பா மீன்பாடி வண்டி ஓட்டுறாரு. அம்மா, ஆயாம்மா வேலை பார்க்கிறாங்க. ரொம்ப வறுமையான குடும்பம். அந்த வறுமையிலும் என்னை கானா பாட ஊக்குவிச்சது என் அப்பாதான். ‘கானா’ பழனி, ‘கானா’ உலகநாதன் இவங்களோட பாடல்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களோட பாடல்களைக் கேட்டுத்தான் நானும் பாட கத்துக்கிட்டேன். எப்படி, வார்த்தைகளை அழுத்தமா பாடணும்? ஏற்ற இறக்கத்தோடு பாடணும்னு அவங்கக்கிட்டதான் கத்துக்கிட்டேன். ‘சங்கி மங்கி சங்கி மங்கிதான்…’, ‘டசக்கு டசக்கு…, இந்த பாடல்கள் எல்லாமே நான் தான் பாடினேன். நான், பாடுன பாடல்கள் நிறைய ஹிட் ஆகிடுச்சு. ஆனா, இந்த நங்கூரமா பாட்டு அதை எல்லாத்தையும் ஓவர்டேக் பண்ணி வைரலாகிடுச்சு.

அப்பா, அம்மா என் மனைவி எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷம். எங்கப்பாம்மாவோட ஆசீர்வாதத்தோடுதான் ஏழ்மையான குடும்பத்திலிருந்து சினிமாவுல ஜெயிக்கிற அளவுக்கு உயர்ந்திருக்கேன். எங்கப்பாம்மாவுக்கு 25-வது கல்யாண நாளைக் கொண்டாடினோம். அப்பா, அம்மாவை நல்லா பார்த்துக்கிட்டாலே எல்லாமே நல்லா நடக்கும். நான், லவ் மேரேஜ். மாதா கோயிலில் சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் மனைவி ரொம்ப அன்பானவங்க. நான், ஏதாவது தப்பு பண்ணினாக்கூட பக்குவமா சொல்லி வழிநடத்துவாங்க. மேரேஜ்தான் சிம்பிளா கோயிலில் பண்ணிக்கிட்டேன். குழந்தையோட பர்த்டேவையாவது கிராண்டா பண்ணனும்னு மனைவி ஆசைப்பட்டாங்க. நங்கூரமாய் பாட்டு பாடினதுக்கு 25,000 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. எனக்கு யுவன்யா, ஜனஶ்ரீன்னு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க.

மனைவி, மகளுடன் ‘கானா’ குணா

‘டீசல்’ பாடல் சம்பளத்துலதான் முதல் மகளோட மகளோட பிறந்தநாளை சிறப்பா கொண்டாடினேன். மகள்களை நல்லபடியா பார்த்துக்கணும்னு நினைக்கிறேன். நான் தினமும் ஜெபம் பண்ணுவேன். இயேசப்பாவாலதான் எனக்கு எல்லா நல்லதும் நடந்தது; நடந்துக்கிட்டிருக்கு. எல்லா புகழும் அவருக்குத்தான். அதேமாதிரி, என் கஷ்ட காலத்தில எல்லாம் என்னை ஊக்குவிச்சு உறுதுணையா இருந்த மலேசியா விமல், கமலநாதன் அண்ணன்கள், என் நண்பன் தினேஷ் ஆகியோருக்கு என்னோட நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன்” என்கிறார் நெகிழ்ச்சியாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.