மகாராஷ்டிர தேர்தலில் வாக்குப்பதிவு மந்தம்: காலை 9 மணி வரை 6.61% மட்டுமே பதிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ. 20) நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல் இரண்டு மணி நேரத்தில் 6.61 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதனால் அங்கு வாக்குப்பதிவு மந்தமடைந்துள்ளது.

அந்த மாநிலத்தில் அதிகபட்சமாக கச்சிரோலி (Gadchiroli) மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.33 சதவீத வாக்குகள் பதிவாகின. சோலாப்பூரில் 5.07 சதவீத வாக்குகள் பதிவு. மும்பை நகர பகுதியில் 6.25 சதவீத வாக்குகள் பதிவு. குறிப்பாக தாராவி தொகுதியில் 4.71 சதவீத வாக்குகள் மட்டுமே காலை 9 மணி நேர நிலவரப்படி பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சினிமா, விளையாட்டு மற்றும் தொழிலதிபர்கள் என பிரபலங்கள் பலர் வசித்து வருகின்ற காரணத்தால் அவர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா தேர்தல் களம்: மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101, உத்தவ் தாக்கரே அணி 95, சரத் பவார் அணி 86 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இந்த சூழலில் மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாநிலத்தில் மொத்தம் 9.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 158 கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

23-ல் வாக்கு எண்ணிக்கை: தானே மாவட்டம் கோப்ரி-பச்பகாடி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே போட்டியிடுகிறார். துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தெற்கு-மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மும்பை வோர்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார். இவர் கடந்த ஜனவரியில் காங்கிரஸில் இருந்து விலகி ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.