கோவை: மின்மாற்றி வாங்கியதில் எந்த வித தவறுகளும் நடைபெறவில்லை என கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கோவையில் ஹாக்கி மைதானம் அமைக்கும் திட்டப்பணி, மாதிரிப் பள்ளிக்கான விடுதி அமைக்கும் பணிகள் தொடர்பாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (நவ.20) ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் திட்டப்பணிகள் குறித்து தெரிவித்தார். தொடர்ந்து மின்மாற்றி வாங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகார் தொடர்பாகவும், நடிகர் விஜய் தொடங்கிய கட்சியால் திமுகவுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்துறையின் சார்பில், கொள்முதல் செய்யப்படும் அனைத்து உபகரணங்களும் முறையாக ஆன்லைன் மூலமாக டெண்டர் விடப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. அதற்கான குழுவினர் விலைப்பட்டியலை ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்பதை தீர்மானித்து அதற்கான உத்தரவுகளை வழங்கியுள்ளனர். கடந்த காலங்களில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைகள் தான் தற்போது பின்பற்றப்படுகின்றன. இதில் எந்த விதமான தலையீடுகளும் இல்லை. இருக்கவும் முடியாது.
சில சமூக ஊடகங்கள், வாரப் பத்திரிகைள் விரைவாக விற்பனையாக குறுகிய மனப்பான்மையுடன் அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்தவித தவறுகளும் நடைபெறவில்லை. மேலும், யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. குறைவாகவும் கூறவில்லை. பொதுவாக என்ன வாக்கு வங்கி வங்கி உள்ளது என்று தெரியாமல் கேட்கிறீர்கள். அரசியல் சார்ந்த கருத்துகளை அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் கேட்கலாம். அரசு விழாக்களி்ல் கேட்பதை தவிர்க்க வேண்டும்’’என்றார்.