ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் கனமழை: மண்டபத்தில் சூறைக்காற்றால் விசைப்படகுகள் சேதம்

ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. மண்டபத்தில் சூறைக்காற்றால் விசைப்படகுகள் சேதமடைந்தன.

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதன்படி, நேற்று அதிகாலையிலிருந்து மாலை வரை தனுஷ்கோடி, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மரைக்காயர்பட்டினம், வேதாளை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்தது. ராமேசுவரத்தில் பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல ஓடியது.

லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம் பகுதிகளில் குளம்போல மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீனவர்கள் குடியிருப்புகளான பாம்பன் தெற்குவாடி, சின்னப்பாலம், தரவைத் தோப்பை மழைநீர் சூழ்ந்தது.

மண்டபம் வடக்கு பாக் நீரிணை கடல் பகுதியில் நேற்று அதிகாலை வீசிய சூறாவளியால் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 விசைப்படகுகள் சேதமடைந்தன. பலத்த காற்று நின்ற பின்னர், மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி ராமநாதபுரத்தில் 96 மி.மீ., பரமக்குடியில் 77, தங்கச்சிமடத்தில் 41, மண்டபத்தில் 40, ராமேசுவரத்தில் 38, பாம்பனில் 33 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.