IND vs AUS: ஆஸியை முதன்முறையாக எதிர்கொள்ளப்போகும் 8 இந்திய பிளேயர்கள்..!

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் செம ஹைலைட் என்னவென்றால், இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் பிளேயர்களில் 8 பேர் முதன்முறையாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாட உள்ளனர். அவர்கள் களத்தில் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு, பேட்டிங்கை சந்திக்க இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் உள்ள 8 பிளேயர்கள் யார்? என்பதை பார்க்கலாம். 

யார் அந்த 8 பிளேயர்கள்?

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்துள்ளது. அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தகுதி பெற வேண்டும் என்றால் இந்த டெஸ்ட்தொடரில் குறைந்தது 3 போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி இருக்கிறது. இப்படியாக இக்கட்டான சூழலில் இந்திய அணி இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளப்போகும் இந்திய அணியில் 8 பிளேயர்கள் முதன்முறையாக அந்த அணியை எதிர்கொள்ளப்போகிறவர்கள். யஷஸ்வி ஜெய்ஷ்வால், சர்ஃபிராஸ் கான், துருவ் ஜூரல், ஆகாஷ் தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா, அபிமன்யு ஈஸ்வரன், ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி ஆகியோர் ஒருமுறை கூட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை.

2 முக்கிய பிளேயர்கள் மீது எதிர்பார்ப்பு

இதில் ஜெய்ஷ்வால் மற்றும் சர்பிராஸ்கான் ஆகியோர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடவில்லை. ஒருவேளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடினால், அவர்களுக்கான இடம் என்பது இந்திய அணியில் உறுதியாகிவிடும். அதனால் இரண்டு பிளேயர்களும் தீவிர பயிற்சியில் இருக்கின்றனர். முகமது ஷமி இல்லாததால் ஆகாஷ் தீப் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் அவரது இடம் என்பது பிளேயிங் லெவன் அறிவிக்கும் வரை உறுதியாக சொல்ல முடியாது. 

கேப்டன் ரோகித் சர்மா ரிட்டன்

இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ள ரோகித் சர்மா, பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் இப்போது அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகிவிட்டது. நியூசிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடரில் இவரின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. அதற்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஒருவேளை டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடாமல், இந்திய அணியும் தோற்றால் இதுவே அவருக்கு கடைசி டெஸ்ட் போட்டியாகவும், கேப்டனாக விளையாடும் கடைசி டெஸ்ட் தொடராகவும் அமைய வாய்ப்பு இருக்கிறது. 

ஆஸ்திரேலிய அணி சவால்

ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய வெற்றியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற வேண்டிய நெருக்கடியில் தான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் களம் காண இருக்கிறது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இம்முறை எக்காரணத்தைக் கொண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோற்ற கோபத்தில் இந்தியாவும், பார்டர் கவாஸ்கர் கோப்பையை தோற்ற கோபத்தில் ஆஸி அணியும் இருப்பதால், இந்த டெஸ்ட் தொடர் மூலம் இரு அணிகளும் பழைய கணக்கை தீர்க்க எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை இளம் வீரர்களின் ஆட்டத்தைப் பொறுத்தே வெற்றி வாய்ப்பு முடிவாகும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.