அமெரிக்க சட்டமன்றத்தில் முதல் திருநங்கை ஸ்டேட் செனட்டராக பதவியேற்றவர் சாரா மெக்பிரைட். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் பெண்களுக்கான கழிவறையை பயன்படுத்த குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் குடியரசு கட்சி சபாநாயகரும் அவருக்கு தடை விதித்துள்ளார்.
சௌத் கரோலீனா மாகாணத்தின் சபாநாயகர் மைக் ஜான்சன், “கேபிடல் மற்றும் ஹவுஸ் அலுவலக கட்டடங்களில் உள்ள அனைத்து ஒற்றை பாலினத்தவருக்கான வசதிகளும் (கழிவறைகள், உடை மாற்றும் அறைகள் மற்றும் லாக்கர் அறைகள் உள்ளிட்டவை) அந்தந்த உயிரியல் பாலினத்தவர்களுக்காக (Biological sex) ஒதுக்கப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.
குடியரசுக் கட்சி LGBTQ+ மக்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருக்கிறது. திருநங்கைகள் உரிமைகள் அங்கு முக்கிய பிரச்னையாக இருக்கிறது.
பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல பழமைவாத கருத்துகளை ஆதரிப்பதனால் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி குறிப்பிட்ட பெண்ணியவாதிகள் மற்றும் பால்புதுமையினரை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அவர்களது வருத்தம் சரியானதுதான் என்பதுபோல தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே இந்த சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. இறுதியாக மெக்பிரைட் கேப்பிடலிலும் அலுவலகங்களிலும் இருக்கும் சில இருபாலர் கழிவறை மற்றும் குளியலறையை மட்டும் பயன்படுத்தும்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்.
“ஜான்சனின் முடிவை நான் ஏற்கவில்லை என்றாலும் அதற்கு உடன்படும் கட்டாயத்தில் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார் மெக்பிரைட்.
“நான் இங்கு பாத்ரூமுக்காக சண்டையிட வரவில்லை, நான் மக்களுக்காக போராடவும் குடும்பங்களின் நிதிச்சுமையை குறைக்கவுமே வந்திருக்கிறேன்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் மெக்பிரைட்.
“நம் அனைவரிடத்திலும் மதிப்புமிக்க ஒன்றை கண்டதினாலேயே வாக்காளர்கள் நம்மை இங்கு அனுப்பியுள்ளனர். ஒவ்வொருவரிடமும் நான் அந்த தகுதிகளையே காண விரும்புகிறேன். அதையே மற்றவர்களும் என்னிடத்தில் காண்பார்கள் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் மெக்பிரைட்.