பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா, டோமினிகா, பார்படோஸ் நாடுகளின் உயரிய விருதுகள் நேற்று வழங்கப்பட்டன.
கரீபியன் பகுதி தீவுகளில் ஒன்றான கயானாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அரசு முறை பயணமாக சென்றார். அந்த நாட்டின் மக்கள் தொகை 8.14 லட்சம் ஆகும். இதில் தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் 3.20 லட்சம் பேர் உள்ளனர். அதாவது கயானாவின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். ஆவர். அந்த நாட்டின் தற்போதைய அதிபர் முகமது இர்ஃபான் அலி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் உத்தர பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்டவர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது முதல்நாள் பயணத்தில் கயானா அதிபர் முகமதுவை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கயானாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இரு நாடுகளிடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கயானா இயற்கை வளத் துறை அமைச்சரும் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவருமான விக்ரம் பரத் தெரிவித்துள்ளார்.
கயானாவின் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர நேற்று சிறப்பு உரையாற்றினார். அப்போது இந்தியாவுக்கும் கயானாவுக்கும் இடையே நெருங்கிய குடும்ப உறவு நீடிப்பதாக அவர் புகழாரம் சூட்டினார்.
கடந்த 1973-ம் ஆண்டில் கரீபியன் பகுதியை சேர்ந்த 15 நாடுகள் கரிகாம் என்ற பெயரில் கூட்டமைப்பை ஏற்படுத்தின. இந்த கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா- கரிகாம் கூட்டமைப்பு உச்சி மாநாடு கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: சர்வதேச அளவில் தெற்கு நாடுகளின் குரலாக இந்தியா உருவெடுத்து உள்ளது. அண்மையில் பிரேசிலில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் தெற்கு நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தினேன்.
ஐ.நா. சபை உள்ளிட்ட உலக அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதற்கு கரிகாம் கூட்டமைப்பு முழுஆதரவு தெரிவித்துள்ளது. இதற்காக இந்தியா சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கயானாவின் உயரிய விருது: உச்சி மாநாட்டின்போது கயானாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் எக்ஸலன்ஸ்’ பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. விருதை வழங்கிய கயானா அதிபர் முகமது கூறும்போது, “சர்வதேச அரங்கில் வளரும் நாடுகளின் உரிமைகளுக்காக இந்தியா போராடுகிறது. உலக சமுதாயத்துக்கு சிறப்பான பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருகிறார். இந்தியா- கயானா உறவை அவர் வலுப்படுத்தி வருகிறார். இதற்காக அவருக்கு விருதினை வழங்குகிறோம்” என்று தெரிவித்தார்.
டோமினிகோவின் உயரிய விருது: டோமினிகோ அரசு சார்பில் டோமினிகோ அவார்ட் ஆப் ஹானர் என்ற விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. விருதை வழங்கிய டோமினிகோ அதிபர் சில்வைனி பெர்டர் பேசும்போது, “கரோனா பெருந்தொற்று காலத்தில் எங்கள் நாட்டுக்கு கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் பிரதமர் மோடிக்கு எங்கள் நாட்டின் உயரிய விருதினை வழங்குகிறோம்” என்று தெரிவித்தார். இதேபோல பார்படோஸ் நாட்டின் சார்பில் ஹானரி ஆப் பிரீடம் என்ற உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
விருதுகளை வழங்கிய கயானா, டோமினிகோ, பார்படோஸ் நாடுகளுக்கு இந்திய மக்களின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி நன்றியை தெரிவித்து கொண்டார்.