“காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்வோம்” – தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவுரை

சென்னை: காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்ல வேண்டும் என விசிகவினரை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவரது சமூக வலைதள பதிவு: களமிறங்கிச் செயல்படுவோர் யாவராயினும் அவர்கள் விமர்சனங்களுக்கு ஆளாவது தவிர்க்க இயலாதது. அவை நேர்மையான, ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இருந்தால், அவற்றிலிருந்து நம்மை நாமே சுய விமர்சனங்களுக்கு உட்படுத்திக் கொள்வதை நடைமுறையாகக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கேற்ப தேவையான மாற்றங்களையும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால், நம்மைப் பற்றிய விமர்சனங்கள் எத்தகையவையாக உள்ளன? அவை, பெரும்பாலும் திட்டமிட்ட பொய்யுரைகளாகவும் ஆதாரமற்ற அவதூறுகளாகவுமே அள்ளி இறைக்கப்படுகின்றன. அவை, மிகவும் கேடான உள்நோக்கம் கொண்டவை. வாய்க்கு வந்தபடி வன்மத்தைக் கக்குவது விமர்சனமல்ல; அவதூறாகும். நம்மை விமர்சிப்பவர்களில் இருவகை உண்டு. நம் மீது நம்பிக்கையும், நமது வளர்ச்சியில் அக்கறையும் கொண்டவர்கள் ஒருவகை. நம்மை ஏற்க மனமில்லாத, நம் வளர்ச்சியை முற்றிலும் விரும்பாத, நம்மை வீழ்த்தி மகிழ்ந்தாட காத்திருக்கும் சதிகாரர்கள் இன்னொரு வகை.

எவர் நம்மை விமர்சிப்பவர்கள் என்பதையறிந்தே நம் எதிர்வினைகள் அமையவேண்டும். கொள்கை அடிப்படையில் நம் எதிரிகள் என்னும் நிலையில், அவர்களின் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு. அது தவிர்க்கமுடியாதது. ஆனால், எதிலும் உறுதியில்லா உதிரிகளா நமது எதிரிகள்? ஆதாரம் ஏதுமின்றி இவர்கள் பரப்பும் அவதூறுகளா நம்மை அசைக்கும் ஆயுதங்கள்? காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரைக் கண்டும் காணாமல் கடந்து செல்வோம். காலமெல்லாம் மக்களுக்காகக் கடமையாற்றுவதில் கவனம் குவிப்போம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.