குருமலை: தொட்டில் கட்டி தூக்கிவரப்பட்ட கர்ப்பிணி; மலைவாழ் மக்களின் வேதனை தீர்வது எப்போது?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையையொட்டிய ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் அவரச மருத்துவத் தேவைக்காக அப்பர் ஆழியார், அட்டகட்டி, ஆழியார் என சுமார் 70 கி.மீட்டருக்கும் மேல் சாலை வழியாக பயணித்து பொள்ளாச்சி வர வேண்டிய நிலை உள்ளது.

இதனால், காலதாமதம் ஏற்படுவதால் குருமலையில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருமூர்த்திமலைக்கு நோய்வாய்ப்பட்டவர்களை தொட்டில் மூலம் தூக்கி வந்து அங்கிருந்து 16 கி.மீட்டர் தொலைவில் உள்ள உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தனர். சரியான பாதை வசதி இல்லாததால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், குருமலையில் வசிக்கும் இரண்டு மாத கர்ப்பிணியான சுமதிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ச்சியாக வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த இளைஞர்கள் தொட்டில் கட்டி, கரடு முரடாண மலைப் பாதையில் சுமதியை திருமூர்த்திமலைக்கு தூக்கி வந்தனர். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சுமதி கொண்டு செல்லப்பட்டார்.

தொட்டில்

இதுகுறித்து குருமலை மக்கள் கூறுகையில், ” மருத்துவமனைக்கு வர வேண்டுமென்றால் 70 கி.மீட்டர் தொலைவு பயணித்து பொள்ளாச்சி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் நாங்கள் பல்லாண்டுகாலமாக பயன்படுத்தி வரும் திருமூர்த்திமலை-குருமலை வரை 5 கி.மீட்டர் தொலைவுக்கு மண் ரோடு அமைத்து தர வேண்டும் என போராடி வந்தோம். இதைத் தொடர்ந்து, ரூ. 49 லட்சம் ரூபாய் மதிப்பில், வன உரிமைச் சட்டம் 2006-ன்படி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், திருமூர்த்திமலை முதல் குறுமலை வரை மண் சாலை அமைக்க உத்தரவிட்டார்.

ஆனால், ஆட்சியரின் இந்த உத்தரவு வனத்துறை அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பணிகள் தொடங்கியதிலிருந்தே வனத்துறையிலிருந்து ஏகப்பட்ட கெடுபிடிகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக, சாலை அமைக்கும் தொழிலாளர்கள் தடுக்கப்பட்டனர். சாலை வழித்தடத்தில் இருந்த சிறிய பாறைகளை அங்கிருந்து நகர்த்திவைத்தோம். ஆனால், பாறைகளை உடைத்ததாக மலைவாழ் மக்கள் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனால், சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் சொகுசாகச் சுற்றுலா செல்வதற்காகச் சாலை கேட்கவில்லை. கடந்த காலங்களில் உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் கர்ப்பிணி முதல் முதியவர்கள் வரை பலரை இழந்திருக்கிறோம். இனியும் இந்த இழப்பு தொடரக் கூடாது என்பதற்காக, சாலை கேட்கிறோம்.” என்றார்.

குருமலை மக்கள்

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “வனப் பகுதிக்குள் சாலை அமைப்பதற்கென்று சில வழிமுறைகள் உள்ளன. அதை தொடக்கத்தில் முறையாகப் பின்பற்றவில்லை. தற்போது, சாலை அமைப்பதற்கு எதிராக தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதன் தீர்ப்புக்குப் பிறகே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.