சீனு ராமசாமியின் இயக்கத்தில், ஏகன், யோகிபாபு, சாகாய பிரிகிடா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’.
இப்படத்தை விமர்சித்து கரு.பழனியப்பன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், ” அண்ணே கோழிப்பண்ணை செல்லதுரை படம் பார்க்கவில்லையா? பார்த்துவிட்டு, நாலு வரி நல்லதா, முகநூலில் எழுதுங்க”என்று சொல்லிக் கொண்டே இருந்தீர்கள். கல்லூரிக் காலம் முதலே நாம் இருவரும் ஒருவரை ஒருவர் அறிவோம் என்றாலும் இதுவரை கடிதம் எழுதிக் கொண்டதில்லை. இதுவே முதல் கடிதம். உங்களுடைய கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம், அரங்க வெளியீட்டின் போது வெற்றி பெறவில்லை எனினும் ஓடிடி தளங்களில் வெளியான பின் பலரும் தங்களை பாராட்டுகின்றனர்.
அதை தாங்களும், தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்கின்றீர். நிற்க. உங்களை பலரும் பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ போல, குறைகளோடு கூடிய படைப்பை கோபுரத்தின் மேல் வைத்து ஒருவர் பாராட்டுவது என்பது அவருடைய பண்பை காட்டுகிறது. அதை நமக்குரியது என நினைத்து ஏற்றுக் கொள்வது நம் பயணத்தை தடை செய்யக்கூடும். சீனு ராமசாமி ஆகிய நீங்கள் செல்ல வேண்டிய தூரமும் அடைய வேண்டிய உயரமும் அளப்பரியது. இந்தக் குழந்தைப் பாராட்டுகளில் குதூகலித்து தேங்கி நின்று விடாதீர்கள்.
“நடிப்பின் அசுரன் தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரிராஜா“ என்ற அடைமொழிகளோடு தாங்கள், கஸ்தூரிராஜா தங்களுக்கு எழுதிய பாராட்டை பகிர்ந்து இருந்தீர்கள்.நல்லது. மகிழ்ச்சி. தனக்கு அடுத்த தலைமுறை இயக்குநர்களின் மேல் கஸ்தூரிராஜா காட்டும் அன்பு அது. இதனால் என்ன நன்மை விளையும் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள். முகம் தெரியாத ரசிகன் நம் படைப்பை ஆரவாரித்து கொண்டாடி வெற்றி பெற செய்ய வேண்டும். அது நிகழும் போது முகம் தெரிந்தவர்கள் எல்லாம் நம்மோடு கைகோர்த்து அடுத்த படம் செய்ய வருவார்கள், என்பதை நீங்களும் அறிவீர்கள் தானே. ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தர்மதுரை’ படங்களுக்கு மேலாக , சிறந்த படைப்பையும் மேலான வெற்றியையும் உங்களது அடுத்த படம் அடையட்டும்” என்று கரு.பழனியப்பன் விமர்சித்திருந்தார்.
இந்த பதிவுக்கு இயக்குநர் சீனு ராமசாமியும் பதிலளிக்கும் வகையில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், ” அதிகாலை காபி குடிக்கும் ஒரு இடத்தில் ஏதேச்சையாக சந்திக்கும் போதெல்லாம் என் படத்தை பற்றி உங்களை நல்லபடியா நாலு வார்த்தை எழுதும்படி நான் கேட்டேன். இப்படித்தான் என் முதல் படம் முதல் உங்களை போன்ற பிரபலங்களிடம் கேட்பேன். தங்களின் புகழ் வாய்ந்த சொற்களில் இந்த எளியோனின் திரைப்படத்தில் இருக்கும் குறைகள் சற்று மன்னிக்கப்பட்டு தங்களின் ரசிகர்கள் தங்களின் அபிமானிகள் இந்த படத்தை மேலும் கொண்டாடக்கூடும். சந்தர்ப்ப சூழ்நிலையில் திரையரங்கம் விட்டு வெளியேறும் புதியவர்கள் நடிக்கும் இது போன்ற படங்கள் இன்றைக்கு ஓடிடி தளத்தில் இந்திய அளவில் புகழ் பெறுவது இந்த இணைய உலகில் சாத்தியமாகிறது.
ஆள்பலம் நிறுவன பலம் ஏதுமற்ற தனிக்கலைஞன் நான். தங்களை நான் சந்தித்த காபி கடையின் வாட்ச்மேன் அய்யாவிடமும் ‘வீட்ல இருக்கிற படிக்கிற பிள்ளைங்க கூட சேர்ந்து படத்தை பார்த்து முகநூல்ல அவுங்க கருத்த எழுத சொல்லுங்க’ என்று சொல்லி விட்டு வந்தேன். அவரும் ’சொல்றேன் அய்யா’ என்றார். நாளையும் அவரிடம் இதை நினைவுபடுத்தவும் நினைத்து இருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் இதை செய்வேன்.
மாஸ்கோ திரைப்பட விழா சிவப்புக் கம்பள வரவேற்பு நடந்து முடிந்து எனது அங்கி பையில் வைத்திருந்த வடபழனி சிவா பிரிண்டரில் அச்சிடப்பட்ட துண்டு விளம்பரத்தை அங்கிருப்பவர்களுக்கு தந்து என் படத்தை பார்க்க வருமாறு அழைத்தேன். அவர்கள் மறுதலிக்காமல் பெற்றுக்கொண்டனர். மக்களை சந்திக்கும் இப்பயிற்சிகளை நம்ம மதுரை டவுன் ஹால் ரோட்டில் நிதி வசூல் செய்யும் பணிகளை தந்து என் கூச்சத்தை நீக்கிய தோழர்களை நன்றியோடு நினைக்காத நாளில்லை.
அடுத்து எனது 10-வது திரைப்படத்தின் பூஜைக்கு தங்களை அழைத்து வாழ்த்தும் பெறுவேன். தங்களை போன்றவர்களின் பதிவுகளாலும் மூத்த படைப்பாளிகளின் ஆசிகளாலும் முன் அறிமுகமில்லாத மக்களின் பதிவுகள் மற்றும் வாய் மொழியின் வழியே ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ 10 கோடி+ நிமிடங்கள் கடந்து முன்னேறிச் செல்வது மகிழ்ச்சி” என்று சீனு ராமசாமி பதிலளித்திருக்கிறார். இந்தப் பதிவுக்கு, “வாழ்த்துக்கள் சீனு..10 கோடி மில்லியன் 10 ஆயிரம் கோடி மில்லியனாக மாறினால் என்னைவிட வேறு எவர் மகிழக்கூடும்?..” என்று கரு.பழனியப்பன் சீனு ராமசாமியின் பதிவிற்கு கமென்ட் செய்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…