சிலம்பரசனுக்கு சினிமாவில் இது 40-வது ஆண்டு. அதாவது அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘உறவை காத்த கிளி’ படம் வெளியாகி, 40 ஆண்டுகள் ஆகின்றன. இதை கொண்டாடும் விதமாக அவர் நடித்த ‘சிலம்பாட்டம்’ படம் ரீரிலீஸ் ஆகிறது. இப்படம் வருகிற 23-ம் தேதி அன்று வடபழனியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ரீரிலீஸ் ஆகிறது.
‘சூரியவம்சம்’, ‘வல்லரசு’, ‘சங்கமம்’, ‘வாஞ்சிநாதன்’, ‘பூவே உனக்காக’, ‘ஷாஜகான்’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் எஸ்.சரவணன், அவர் இயக்குநராக அறிமுகமான படம் ‘சிலம்பாட்டம்’. இந்த படத்தில் அக்கிரஹாரத்து அம்பி – அதிரடித் தம்பி என டபுள் ஆட்டம் ஆடியிருப்பார் சிம்பு. யுவனின் இசை, மதியின் ஒளிப்பதிவில் கலர்ஃபுல்லான படமாக பெயரெடுத்தது.
சினேகா, சனாகான், பிரபு, சந்தானம், நெடுமுடிவேணு, கருணாஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் உண்டு. கடந்த 2008 டிசம்பர் 12-ல் வெளியானது இப்படம். இந்த படம் குறித்த நினைவுகளை மகிழ்வும் நெகிழ்வுமாக இங்கே பகிர்கிறார் இயக்குநர் சரவணன்.
”’சிலம்பாட்டம்’ சிம்பு சார்கிட்ட போய் சேர்ந்ததே, சுவாரஸியமானது. கதை ரெடியானதும் முதன்முதலில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சார்கிட்டத்தான் சொன்னேன். ‘பக்கா கமர்ஷியல்’ ஆக இருக்குதுனு சார்’னு சொல்லி சிரஞ்சீவி சார்கிட்ட கதை சொல்ல நேரம் வாங்கி கொடுத்தார்.
சிரஞ்சீவி சாரை பார்த்து கதையை சொன்னேன். கதை ரொம்ப பிடிச்சிருந்ததுனு சொன்னார். இப்போது படத்தில் உள்ள இரண்டாம் பாதியை போல், அந்த கதையில் இல்லை. வேறொரு செகண்ட் ஹாப் தான் இருந்தது. ஆனால், சில காரணங்களால் பண்ணமுடியாமல் போனது.
விஜய் சாரின் ‘பூவே உனக்காக’, ‘ஷாஜகான்’, ‘மதுர’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கேன். அப்போது அவர் டபுள் ஆக்ஷன் பண்ணாமல் இருந்தார். அதனால் அவர்கிட்ட இந்த கதையை சொன்னேன். அவர் டபுள் ஹேப்பி. ஆனால், ஏஸ்.ஏ.சி. சார் கதையை கேட்டுட்டு, ‘விஜய் முதல் முறையாக டபுள் ஆக்ஷன் பண்றார். இந்தக் கதையில் உள்ள இரண்டு கேரக்டர்களும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கவே இல்லை. இரண்டு கேரக்டர்களும் சந்திக்கறது மாதிரி கதையாக இருந்தால், விஜய்க்கு சரியானதாக இருக்கும்’னு சொன்னார். அப்பாவின் ஜீனில் இருக்கற ஒரு விஷயம், பையனுக்கு வருது. அதான் கதை லைன். அதனால, இரண்டு கேரக்டர்களும் சந்திக்காது என்பதால், விஜய் சாரால் பண்ணமுடியாமல் போனது.
அதைப்போல, அஜித் சாரின் ‘திருப்பதி’யில் ஒளிப்பதிவு செய்திருந்தால, அவரும் என்மேல் ப்ரியமாக இருப்பார். அவர்கிட்ட கதையை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. `அவரும் கதை பிடித்திருந்தது. தயாரிப்பாளர் மோகன் நடராஜன் சார்கிட்ட சொல்லச் சொன்னார்.’ அவருக்கும் கதை பிடித்திருந்தது. அந்த சமயத்தில் பட்ஜெட் கொஞ்சம் பெரிய பட்ஜெட் என்பதால், வெயிட் பண்ண சொன்னார். அதன்பிறகு அஜித் சார் வேறொரு படத்துக்கு போக வேண்டியதினால, இந்த படம் கூடி வரலை.
எல்லா ஹீரோக்களுக்கும் கதை பிடித்திருக்கிறது. ஆனால், மேற்கொண்டு நகர மாட்டேங்குதே என்பதால் இனி முயற்சி பண்ண வேண்டாம் என அப்படி விட்டுட்டேன். இந்த சமயத்தில் கனல் கண்ணன் என்னிடம், ‘சிம்பு சார் கதை கேட்கிறார். கமர்ஷியல் கதை தான் எதிர்பார்க்கிறார். இந்த கதை அவருக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்’ என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.
இதற்கு முன் அவருடன் நான் பணிபுரிந்ததில்லை. சிம்பு என்னை வரச் சொன்ன அன்று, நான் சரத் சாரின் ‘வைத்தீஸ்வரன்’ படத்தின் ஒளிப்பதிவில் இருந்தேன். சிம்புவ்வை சந்தித்து கதையை சொன்னதும், ‘பிரதர் அசத்திட்டீங்க பிரதர்’னு சொல்லிட்டார். இந்த கதையை கேட்பதற்கு முன் அவர் சில கமிட்மெண்ட்களை வைத்திருந்தார். அதில் மிஷ்கின் சாரின் ‘முகமூடி’யும் ஒன்று. ஆனால் அவர் கதையை கேட்டபின், எல்லா கமிட்மெண்ட்களையும் விட்டுவிட்டு, ‘சிலம்பாட்டம்’ படத்திற்கு வந்து நின்றார்.
அதன் பிறகு தயாரிப்பாளர்கள் ‘எல்.எம்.எம்.’ முரளி சார், சுவாமிநாதன் சாரும் கதையை கேட்டாங்க. இதுல வரும் விச்சு, தம்பி என ரெண்டு கேரக்டர்களும், ரெண்டு கதையாக வரும் என்பதால், இரண்டிலும் சிம்புவுடன் வேற வேற நடிகர்கள் இருப்பாங்க. தயாரிப்பாளர்கள் ‘இரண்டு படத்திற்கான நடிகர்களை சொல்றீங்களே’னு சிரித்துக் கொண்டே சொல்வார்கள். நான் கேட்ட நடிகர்களை எல்லாம் கமிட் செய்து கொடுத்தார்கள். ஆரம்பத்துல வேறொரு இசையமைப்பாளர் தான் இசையமைக்கறதா இருந்தது.
அதன்பிறகே யுவன் ஷங்கர் ராஜா வந்தார். அவர் இசைக்கு பின், படம் வேற லெவல் ஆனது. பாடல்கள் அத்தனையும் செம ஹிட். விச்சு, தம்பி ரெண்டு கதாபாத்திரங்களிலும் சிம்பு, வித்தியாசங்கள் காண்பித்து நடித்திருப்பார். அவரோட ஒத்துழைப்பு எனக்கு பெரிய பலம். படப்பிடிப்பில் ரொம்பவே அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தார். ‘பிரதர், தினமும் எதாவது சர்ப்ரைஸ் வச்சிருக்கீங்க’னு சொல்லி, சரியாக படப்பிடிப்புக்கு வந்து நடித்துக் கொடுத்ததை மறக்க முடியாது. கலை இயக்குநர் பிரபாவின் ஐய்யனார் கோவில் செட் இப்போதும் பேசப்படும். என்னுடைய உதவியாளர் மதி, இந்த படத்தின் மூலம், ஒளிப்பதிவாளரானார். இதற்கு முன் உள்ள சிம்புவின் படங்களிலேயே பெஸ்ட் ஓப்பனிங் கிடைத்த படம் எல்லாருமே பாராட்டினாங்க. ஒரு இயக்குநராக எனக்கும் இது பெரிய சந்தோஷம். இப்ப ரீரிலீஸ் ஒரு ஷோ மட்டும்தான் பண்றாங்க. ஆனால், தமிழகம் எங்கும் இதை மீண்டும் வெளியிடுவதற்கான முயற்சிகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது” என்று மகிழ்கிறார் இயக்குநர் சரவணன்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…